நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக விளங்கும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதே உண்மையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வாக்குறுதிகள்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்களும் 5 இலட்சம் ஓய்வூதியதாரிகளும் 65 இலட்சம் சேமலாப நிதியை பெறுவோரும் உள்ளனர். இவர்களே நாட்டின் பொருளாதார வேகத்தை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இம்முறை ஒரு கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யதார்த்தமான முறையில் சம்பளத்தை அதிகரித்துள்ளார். அதனுடன், மற்ற வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குரியாகும்.
இதேவேளை வாக்குகளுக்காகவே அரச சேவையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சில கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.
ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக விளங்கும் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதே உண்மையாகும்.
பொருளாதார திட்டங்கள்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரச துறையைப் பலப்படுத்தியுள்ளார்.
2024 ஜனாதிபதி தேர்தல் சாதி, மதம் சார்ந்த தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதாக அன்றி உலகின் வலுவான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்பதால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும்.
உறுமய – அஸ்வெசும போன்ற திட்டங்கள் நாட்டின் பொருளாதார திட்டங்களுக்காகவே செயற்படுத்தப்படுவதாகவும், மாறாக அரசியல்வாதிகள் கூறவதைப் போன்று தேர்தல் நோக்கத்திற்காக செயற்படுத்தப்படும் திட்டங்கள் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.