ஹோமாகம பொலிஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, புத்தாண்டு தினத்தன்று
விடியற்காலையில் நேரத்தில் ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற வீதிப் பந்தயத்தில்
ஈடுபட்ட இரண்டு கார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வீதிப் பந்தயத்தின் காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டிருந்தது.
காட்சிகளின்படி, ஹோமாகமவில் உள்ள ஹைலெவல் வீதியில் உள்ள கலவிலவத்தையில் உள்ள
பாதசாரிகள் கடவையிலிருந்து சட்டவிரோத பந்தயம் ஆரம்பித்துள்ளது.
ஓட்டுநர்களிடமிருந்து வாக்குமூலங்கள்
விசாரணைக்குப் பிறகு, பந்தயத்தில் ஈடுபட்ட கார்கள் நேற்று பொலிஸாரால்
பொறுப்பேற்கப்பட்டு, அவற்றின் ஓட்டுநர்களிடமிருந்து வாக்குமூலங்களும்; பதிவு
செய்யப்பட்டுள்ளன.
இந்த காணொளி முதலில் ஏப்ரல் 13 அன்று இரவு 11:43 மணிக்கு பேஸ்புக்கில்
பொக்கெட் ராக்கெட்ஸ் கிளப் என்ற குழுவால் வெளியிடப்பட்டது.
இந்த பந்தயத்தை நடத்துவதற்கு எந்தவொரு தொடர்புடைய அதிகாரியிடமிருந்தும் முன்
அனுமதி பெறப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அத்துடன் வீதிகளில் ஏனைய வாகனங்கள் பயணிக்காதப்படி எந்த ஏற்பாடுகளும்
செய்யப்படவில்லை.
எனவே விபத்துக்கள் ஏற்படும் அபாயத்துடனேயே இந்த வீதிப்பந்தயம்
நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பந்தயம் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் குறிப்பிடத்தக்க
சிரமத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, அந்தப் பகுதியில் வசிப்பவர்கள்
முறையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.