தமிழ்த் தேசிய அரசியலை காப்பாற்ற கூடிய வகையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தலைவர்கள் எவரும் தென்படவில்லை என்பதே பொய்யின் நிழல்படாத உண்மை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (09) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித் தவிக்கிறது தமிழினம் உதட்டளவில் தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் ஐக்கியப்பட்டு குறைந்தபட்சம் தேர்தல் கூட்டாவது அமைத்திருக்கலாம்.
தமிழ்த்தேசியத்தின் இருப்பு
பதவி வெறியாலும் அதிகார திமிராலும், ஆணவச் செருக்காலும் மற்றும் ஆளுக்கு ஆள் தனி வழி சென்று தமிழ்த்தேசியத்தை இருப்பை கூறு போட கங்கனம் கட்டி நிற்கிறார்கள்.
இன விடுதலை அரசியலை முன்னெடுக்க கிஞ்சித்தும் அறச்சிந்தனை அற்ற பதவி சுகபோகிகள் மீண்டும் தமிழினத்தை கருவறுக்க முனைகிறார்கள்.
சிங்கள தேசம் காலத்துக்கு காலம் தமது இருப்பை தனதாக்க ஒரே நோக்கில் சிந்திக்கிறது அத்தோடு தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்குள் ஒருவரை ஒருவர் அகற்ற முனைகிறார்கள்.
உட்கட்சிகளின் ஊசலாட்டம் ஊரே சிரிக்கிறது இவர்கள் எவரும் இனம் சார்ந்து சிந்திப்பதாக இல்லை பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் உருப்படியாக எதுவுமே சாதிக்கவில்லை தனது சுய இலக்கை மட்டுமே எட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல்
இந்த தேர்தலிலும் போட்டியிட வெட்கம், மானம், ரோசம் மற்றும் சுய கௌரவம் தன்மானமின்றி தேர்தல் களத்திற்கு வருகிறார்கள் இவர்களுக்கு எதிராக சிவில் அமைப்புகள் தன்னார்வலர்கள் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
புதியவர்களில் வல்லவர்களை களத்திற்கு அனுப்புங்கள் தமிழ்த்தேசிய உணர்வும் தூய விசுவாசமும் இனப்பற்றும் இரண்டகமற்ற செயற்பாட்டர்களாக உள்ளவர்களை தெரிவு செய்யுங்கள் அதிகம் படித்தவர்கள் என்று கூறுபவர்கள் இந்த நாட்டை சீர்குலைத்தது இருக்கிறார்கள்.
சட்டத் தரணிகளாலே தமிழர் அரசியல் படு பாதாளத்துக்கு சென்றது தமிழின விரோதிகளான இந்த நாட்டின் இனவாதத்தின் மூலவர்களான ஜே.வி.பி யை ஆதரிக்க முனைவது என்பது கடந்த கால வரலாறு எதுவுமே தெரியாத அல்லது வரலாற்றை மறந்து தமிழ்த் தேசியத்திற்கு செய்யும் பெரும் துரோகமாகும்.
சிந்தியுங்கள் ஜே.வி.பியை மீட்பர் என கொண்டாட முனையும் இளைய சமூகமே இவர்களின் கடந்த கால வரலாற்றை தேடி படியுங்கள்.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தி என்பது வெறும் அரிதாரமே அவர்களின் சுயம் தேர்தலுக்குப் பின்னர் வெளிப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.
தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும் இல்லையேல் பலரது அரசியல் எதிர்காலம் கனவாகவே போய்விடும் குறைந்தபட்சம் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் போட்டித் தவிர்ப்பை மேற்கொள்வது அவசியமாகும்.
தமிழ் மக்களின் எதிர்காலம் கேள்விகுறிக்குள்ளாகும் தமிழ்த்தேசிய அரசியல் சில சுயநலவாதிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி தவிக்கிறது.
கூட்டு ஐக்கியத்தை யே தமிழ் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பல அணிகளாக பிரிந்து நிற்பதை தமிழ் மக்கள் ரசிக்கவில்லை விரக்தியின் உச்சத்தில் உள்ளனர்.
தனித்தனியாக தேர்தலை சந்திப்பது என்பது முடிவில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் தமிழ்த் தேசிய அரசியலை இனி எவராலும் காப்பாற்ற கூடிய வகையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தலைவர்கள் எவரும் தென்படவில்லை என்பதே பொய்யின் நிழல்படாத உண்மை.
பல அரசியல்வாதிகளை காலம் காணாமல் போகச் செய்யப் போகிறது என்பது மட்டும் புலனாகிறது தமிழ் மக்கள் தேசமாக சிந்திக்கும் சூழலையே தமிழ்த் தேசிய கட்சிகள் இல்லாமல் செய்து விட்டனர் என்பது கள யதார்த்தம் புரிந்து கொள்வர்களா ? என குறிப்பிடப்பட்டுள்ளது.