ஜப்பானில் (Japan) வேலை தேடும் இலங்கையர்களின் மொழித் திறன் மற்றும் பயிற்சியை மேம்படுத்துவதன் மூலம் வேலை தேடுபவர்களின் தரத்தை உயர்த்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பி. சேனாநாயக்க (D.D.P. Senanayake) இந்த விடயத்தினை தெரிவித்தார்.
நேற்று (28) இலங்கைக்கு வருகை தந்த IM Japan நிறுவனத்தின் தலைவர் கிமுரா ஹிசயோஷி மற்றும் நிர்வாக இயக்குநர் ஃபுககாவா மசஹிகோ ஆகியோர், பணியகத்தின் உயர் நிர்வாகத்துடன் சந்திப்பு நடத்தியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தாதியர் துறையில் வேலைவாய்ப்பு
ஜப்பானில் தாதியர் துறையில் இலங்கையர்களுக்கு அதிக தேவை இருப்பதால், தாதியர் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிப்பது பொருத்தமானது என IM Japan தலைவர் கிமுரா கூறினார்.

இந்த நோக்கத்திற்காக பயிற்சிக் குழு ஒன்றை அமைத்து பராமரிப்பது அவசியம் எனவும் வலியுறுத்திய அவர், விசேட திறன் கொண்ட தொழிலாளர்களுக்கான திறன் தேர்வு தொடர்பான கற்பித்தல் நடவடிக்கைகளுக்கு IM Japan ஆதரவளிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்த தகவல்களை, சிரேஷ்ட பயிற்சியாளர்கள் மூலம் புதிய வேலை தேடுவோருக்கு வழங்குவதன் மூலம், விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என பணியக பொது முகாமையாளர் டி.டி.பி. சேனாநாயக்க குறிப்பிட்டார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
ஏற்கனவே சிரேஷ்ட பயிற்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஒப்புதலுடன் ஏராளமானோர் இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில், ஜப்பானுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர்களாக சென்ற 12 பேருக்கும், விசேட திறன் பணியாளர்கள் திட்டத்தின் (SSW) கீழ் ஓகஸ்ட் 3 ஆம் திகதி வெளிநாடு செல்லவுள்ள 8 பேருக்கும் விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் IM Japan நிறுவனமும் 2017 மற்றும் 2019 இல் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி, இலங்கையர்களுக்கு இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதுவரை, 600 பேர் தொழில்நுட்ப பயிற்சியாளர்களாகவும், 51 பேர் விசேட திறன் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

