ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும் போது செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்வது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்துள்ளார்.
இதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு, ஆட்கள் பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல முடியும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
செல்லுபடியான அடையாள அட்டைகள்
மேலும், அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மதகுரு அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை தகவல் உறுதிப்படுத்தல் கடிதம் என்பனவும் வாக்களிக்க செல்லுபடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை ஆகியவையும் வாக்களிக்க செல்லுபடியாகும்.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு
தெளிவில்லாத அடையாள அட்டைகள், அமைச்சுகள், திணைக்களங்கள், அரச நிறுவனங்கள், வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பத்தின் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லும்போது உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை எடுத்துச் செல்வது மிகவும் அவசியம் எனவும் இது வாக்களிப்பு நிலைய அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.