யாழ். போதனா வைத்தியசாலையில் விபத்து, சத்திரசிகிச்சை அதிதீவிர சிகிச்சைப்
பிரிவில் (ATICU) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை சம்பந்தமான விளக்க ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினரால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1. மேற்படி பிரிவு 20 வருடங்களுக்கு மேலாக யாழ் மக்களுக்குத் தேவையான அவசியமான
சிகிச்சை, பராமரிப்பு முறைகளை திட்டமிட்டு தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.
தாதியர் ஆளணி
2. இங்கு மிகக்குறைந்த தாதியர் ஆளணியுடன் வினைத்திறனான சேவையை வழங்கி
வருகின்றனர். இந்த அலகிற்கான சேவையை வழங்க ஆகக்குறைந்தது 30 தாதிய
உத்தியோகத்தவர்கள் தேவைப்படும் நிலையில் 13 தாதிய உத்தியோகத்தவர்களே கடமையில்
ஈடுபட்டுள்ளனர்.
3. மேற்படி விடுதிப் பராமரிப்பு (ATICU) திட்டங்களை தர நிலை 1 இலுள்ள தாதிய
உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக திறம்பட முகாமைத்துவம்
செய்து வருகின்றார். இவர் 20 வருடங்களுக்கு மேலான சேவை அனுபவத்தினை அதிதீவிர
சிகிச்சைப் பிரிவில் நிறைவு செய்த ஒரு அர்ப்பணிப்பான சேவையாளர் என்பதனை
குறிப்பிட விரும்புகின்றோம்.
4. இவர் கடமைபுரிந்த காலப்பகுதியில் தனது குழு உறுப்பினர்களுடன்
(வைத்தியர்கள், தாதியர்கள், சிற்றூழியர்கள்) மிகவும் அந்நியோன்னியமான உத்தியோக
ரீதியான உறவு முறையினை (Professional Relationship) பேணி நோயாளர் பராமரிப்புத்
திட்டத்திற்கு வெற்றிகரமான செயற்பாட்டினை உறுதி செய்துள்ளார்.
5. மிகக் குறுகிய காலத்தில் அங்கு கடமை புரியும் வைத்தியர் ஒருவருக்கும்
பொறுப்புத் தாதிக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து முரண்பாட்டின் பின்னணியில் இந்த
அசாதாரண சூழ்நிலை தோன்றியுள்ளது. இது சம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணைகள்
முடிவடையும் தறுவாயில் இருப்பதுடன் சுகாதார அமைச்சின் முறையான விசாரணைக்கு
இவ்விடயம் உட்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை முடிவடையும் பட்சத்தில் அனைவரும்
ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினைப் பெற்றுக்கொள்ள முடியும் என நாம்
கருதுகின்றோம்.
சதி நடவடிக்கைகள்
6. எனவே இந்த விடயம் சம்பந்தமாக எமது சேவையைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து
மக்களும் சேவையின் அவசியத்தினை உணர வேண்டும் என்பதனையும் தேவையற்ற விடயங்களை
கருத்தில் எடுக்க வேண்டாம் எனவும் வினயமாகக் கேட்டுக்கொள்கின்றோம்.
7. மேற்படி விடயம் சம்பந்தமாக பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் உண்மைக்குப்
புறம்பானவை என்பதனையும் இவை எமது கண்ணியமான சேவைக்கு களங்கம் ஏற்படுத்தும்
விதமாக அமைந்துள்ளது என்பதையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
8. இந்த முரண்பாடுகள் திட்டமிட்ட ரீதியில் குறிப்பிட்ட சில நபர்களால்
மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கைகள் என்பதனை மக்கள் புரிந்துகொண்டு
விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டிய காலப்பகுதியில் இருக்கிறோம் என்பதனை
தெளிவுபடுத்த விரும்புகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.