யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (4) பல்கலைக்கழக நுழைவாயிலில் இடம்பெற்றுள்ளது.
சம்பள உயர்வு, ஆட்சேர்ப்பு, மேலதிக நேரக் கொடுப்பனவு, வரவு செலவுத்
திட்டத்தில் தமது சம்பள முரண்பாட்டிற்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை உட்பட
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு
இதன்போது, கல்வி சாரா ஊழியர்களின் சம்பள உயர்வை அதிகரிக்க
வேண்டும் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையில் வாழ்க்கைச் செலவுக்கேற்ப
கொடுப்பனவினை வழங்க வேண்டும் என்கின்ற பதாதைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தோடு, இந்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் பதிலளிக்கவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா
நாடு பூராகவும் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், வவுனியாப் பல்கலைக்கழகத்தின் வாயிலிலும் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் பதாதைகளையும் ஏந்தியவாறு ஒரு மணி நேரம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் தமக்கு வழங்கப்பட்டு வருகின்ற கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளணி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த காலத்தில் தமக்கு வழங்கப்பட்டு வந்த சில கொடுப்பனவுகள் இந்த முறை வரவு செலவு திட்டத்தில் அதிரடியாக குறைக்கப்பட்டு இருப்பதாகவும் சம்பள உயர்வு என்ற பெயரில் தமக்கான சம்பளம் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகம்
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (04) நண்பகல் அடையாள
வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
நீண்ட காலமாக தீர்க்கப்படாமல்
இருக்கின்ற சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க
வேண்டும், குறிப்பாக கடந்த 9 வருடங்களாக சம்பளம் முரண்பாட்டுப் பிரச்சினை
நீடிக்கின்றது இதற்கு எந்த ஒரு அரசும் அதிகாரிகளும் இதுவரை தீர்வு தரவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
அரசாங்கம் முன் வைத்துள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தில் கூட
பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுகின்ற கல்விசாரா ஊழியர்களுக்கு எந்த விதமான
வரப்பிரசாதங்களும் முன்வைக்கப்படவில்லை.
ஆகவே அரசாங்கம் எமது மேற்படி
கோரிக்கைகளையும் தீர்க்கப்படாத ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குமாறு
வலியுறுத்தி இன்றைய தினம் இந்த அடையாள வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.