இலங்கைக்கான கொரியக் குடியரசுத் தூதுவர் லீ
மியோன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு இன்று (17) ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் நீடித்து வரும் திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு
காணும் நோக்கில் “கழிவிலிருந்து மின்சார உற்பத்தி (Waste-to-Energy)
திட்டம்” தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கழிவகற்றல்
திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்துக்கான திட்டம் ஒன்றை இலங்கையில்
நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,
இதற்காக நிதி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் பொதுநிர்வாக,
உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள்
நடைபெற்றுள்ளதாகவும் கொரியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலும்
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஆளுநர் வரவேற்றதோடு,
மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் திண்மக் கழிவகற்றலில் எதிர்கொள்ளும்
சவால்களை அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்கள்
கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

