நல்லூர்(nallur) கந்தசுவாமி ஆலயத்தில் கார்த்திகை விளக்கீட்டின் குமாராலயதீப உற்சவ நிகழ்வு சிறப்பாக இன்றையதினம்(13) இடம்பெற்றது.
இந்துக்களின் விசேட பண்டிகையான கார்த்திகை விளக்கீடு தினமாகிய இன்றையதினம் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் முருக பெருமானுக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது. பின்னர் சொக்கப்பானை என அழைக்கப்படும் கார்த்திகை தீப நிகழ்வு நல்லூர் ஆலய முன்வளாகத்தில் இடம்பெற்றது.
சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம்
மாலை 4:30 மணியளவில் முருகப் பெருமானுக்கு வசந்த மண்டப பூஜை இடம் பெற்று முருகப்பெருமான் உள் வீதி வலம் வந்து கோயில் முன்வாயிலில் சொக்கப்பானை எனப்படும் கார்த்திகை தீபம் பனை ஓலைகளால் விசேடமாக வடிவமைக்கப்பட்ட இடத்தினை எரியூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
சொக்கப்பானை நிகழ்வு இடம்பெற்ற பின்னர் நல்லூர் முருகப் பெருமான் கைலாய வாகனத்தில் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்றைய சொக்கப்பானை நிகழ்வில் பெருமளவு முருகன் அடியவர்கள் கலந்து கொண்டனர்.