இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (23) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, இந்திய வம்சாவளி தமிழ் (IOT) சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தொடர்பான விடயங்கள், டிட்வா சூறாவளியின் பின்னரான அனர்த்த நிலைமைகள் மற்றும் குறிப்பாக மலையகப் பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிவிவகார ஜெய்சங்கரிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மலையக மக்களின் நலன்
மேலும், இக்கட்டான காலகட்டத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இந்த விசேட சந்திப்பின்போது, இந்தியாவின் ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட நான்கு முன்னுரிமை அம்சங்களை உள்ளடக்கிய ஆவணமும் ஜெய்சங்கரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், மலையக மக்களின் நலன் மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான கூட்டு முயற்சிகளையும் மேலும் வலுப்படுத்தும் என ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு, டித்வா சூறாவளிக்குப் பின்னரான இலங்கையின் மீள்கட்டுமான முயற்சிகளில் இந்தியா மற்றும் இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கிடையிலான தொடர்பையும் பரஸ்பர நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த சந்திப்பில், மனோகணேசன், செந்தில் தொண்டமான், ஜீவன் தொண்டமான், இராதகிருஷ்ணன், திகாம்பரம், மருதபாண்டி ரமேஷ்வரன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




