முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச
நியமனம் வழங்கினார் ஆனால் இந்த அரசாங்கம் இந்த பட்டதாரிகளுக்கு அநீதி
இழைக்கின்றது என இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தெரிவித்தார்
பாடசாலைகளின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்து ஆசிரிய பணி புரிந்து
வருகின்ற பட்டதாரிகளது நிரந்தர ஆசிரியர் நியமனம் மறுக்கப்பட்டு பாடசாலைகளில்
இருந்து ஏனைய திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு
செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (23) மட்டக்களப்பு மனித உரிமைகள்
ஆணைக்குழுவில் இலங்கை பட்டதாரிகள் சங்க தலைவர் கணேசன் அநீரன் தலைமையில்
பட்டதாரிகள் முறைப்பாடு செய்தனர் இதன் போது ஊடகங்களுக்கு கருத்து
தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்
அநீதிகளுக்கு சட்டரீதியாக நடவடிக்கை
கடந்த 6 வருடங்களாக பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு
ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றோம் அந்த வகையில் கடந்த அரசாங்கத்தால்
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சட்டரீதியாக நடவடிக்கை கடந்த வருடம்
மேற்கொண்டிருந்தோம்

அந்த வகையில் கடந்த அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை
ஆற்றிக் கொண்டு வருகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஒரு
இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒரு தீர்வை தர இருந்தபோதும் ஆட்சி மாற்றத்தின்
பிற்பாடு தற்போதைய அரசாங்கம் பாடசாலையில் இணைக்கப்பட்டு ஆசிரியர் பணியை
ஆற்றிக் கொண்டு வருகின்ற பட்டதாரிகளை நிரந்தர ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க பல
விடையங்களை கூறிக் கொண்டிருக்கிறது.
பொய் உரையை நாடாளுமன்றத்தில் ஆற்றிய பிரதமர்
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் பிரதமர், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின்
அனைத்து வழக்குகளும் நிறைவுற்றுள்ளது. எனவே இவர்களை போட்டிப்பரீட்சை மூலம்
உள்வாங்க அனைத்து ஏற்பாடும் இடம்பெற்றுள்ளது என தெரிவித்தார் இருந்தபோதும்
மத்திய அரசாங்கம் சார்ந்த வழக்கு மாத்திரம் நிறைவுற்றுள்ளது.

மாகாண சபை சார்ந்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி 29ம் திகதி இருக்கிறது
ஆனால் பிரதமர் அனைத்து வழக்குகளும் நிறைவுற்றுள்ளதாக பொய் உரையை
நாடாளுமன்றத்தில் ஏன் செய்துள்ளார்?
6 வருடங்களாக பாடசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இருந்தாலும் ஆசிரியர்
பணியை ஆற்றி வருகின்ற குறித்த தரப்பினருக்கு 45 வயதாக அதிகரித்துள்ளோம் அதன்
ஊடாக போட்டி பரீட்சை ஊடாக ஆசிரியர் நியமனமத்துக்குள் உள்வாங்குவதற்கான
ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றோம் என்பது உண்மையில் ஒரு சரியான தீர்வா?
என்பதை தற்போதைய அரசாங்கம் நினைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விடையம் தொடர்பாக தற்போதைய ஆட்சியாளர் ஒருவரிடம் கூறியபோது கடந்த
அரசாங்கம் தந்த நியமனங்களை எவ்வாறு நாங்கள் முடிவுறுத்துவது என கூறினார்
அப்படியாக இருந்தால் கடந்த காலத்தில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அரசியல்வாதிகள் செய்த அந்த ஊழல்களுக்கு இப்போதைய அரசு நடவடிக்கை எடுத்து
வருகிறது.
நீதியான விடையத்தை தர ஏன் எத்தனிக்கவில்லை
இப்படி கடந்த கால ஊழல்களுக்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியுமானால்
எங்களையும் கடந்த கால அரசாங்கள் தங்கள் தேவைகளுக்காக அரசியலுக்காக
பயன்படுத்தியுள்ளனர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு
ஒரு தடவையில் நியமனம் வழங்கினார்

பாதிக்கப்பட்ட தரப்பு என்ற ரீதியில் இப்போது உள்ள அரசாங்கம் நீதியான விடையத்தை
தர ஏன் எத்தனிக்கவில்லை. அதேவேளை 6 வருடம் பாடசாலைகளில் கடமையாற்றிவருபவர்களை
பெப்ரவரியில் வேறு திணைக்களங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டு வருகின்றது
அவ்வாறு நடந்தால் இந்த அரசாங்கம் மீண்டும் மீண்டும் தவறு இழைக்கின்றது
6 வருட ஆசிரியர் பணியை வைத்து போட்டி பரீட்சை இல்லாமல் பிரத்தியேக பரீட்சை
வைத்து எங்களை ஆசிரியர் பணிக்கு உள்வாங்க வேண்டும் இருந்தபோதும் எங்கள்
தொழில் உரிமை. அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது அதனடிப்படையில் இன்று மனித
உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம் என்றார்

