முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தில் பாரிய நிதி மோசடி
இடம்பெற்று வருவதாக பேருந்து உரிமையாளர்களினால் முல்லைத்தீவு பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் சரியான
கணக்கறிக்கைகள் வரவு – செலவு என்பன நீண்டகாலமாக காண்பிக்கப்படாமல் இழுத்தடிப்பு
செய்யப்பட்டு பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பேருந்து
உரிமையாளர்களினால் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டுள்ளது.
தனியார் பேருந்து கணக்கறிக்கைகள்
கடந்த நான்கு ஆண்டுகளாக தனியார் பேருந்து நிர்வாகம் சீர்செய்யப்படாமல்
கணக்கறிக்கைகள் காட்டப்படாமல் இருப்பது தொர்பில் பல பேருந்து உரிமையாளர்கள்
கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
அத்துடன், இதுவரை நிர்வாகம் சீர்செய்யப்படாத நிலையில் பல தடவைகள் மாவட்ட
அரசாங்க அதிபர், ஆளுனர் உள்ளிட்டவர்களுக்கு பேருந்து உரிமையாளர்களினால் எழுத்து
மூலம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததையடுத்து பாரிய நிதி
மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளமை பேருந்து உரிமையாளர்களினால் கண்டறியப்பட்டுள்ளது.
நாளாந்தம் பேருந்து உரிமையாளர்களினால் கொடுக்கப்படும் கட்டணங்கள்
சேமிப்புக்கள் என்பனவற்றுக்கான கணக்கறிக்கை இதுவரை காட்டப்படாத நிலையில் இந்த
பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், பேருந்து உரிமையாளர்களின் முறைப்பாட்டின் படி குறித்த
விசாரணையினை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் இதனை நீதிமன்றில்
பாரப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.