முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் இலங்கை இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த
மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு, இன்றையதினம்(14.08.2025) வான் தாக்குதல் இடம்பெற்ற
இடத்தில் நடாத்தப்பட்டுள்ளது.
கடந்த 2006.08.14 அன்று முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை
வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை
நடத்திய தாக்குதலில் 53 பாடசாலை மாணவர்களும் 4 பணியாளர்களும் உயிரிழந்தனர்.
அக வணக்கம்
இந்நிலையில், உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர்தூவி இன்று அஞ்சலி
செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்,
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு
பிரதேச சபையின் உறுப்பினர்களான சி.குகனேசன், க.தர்மலவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன், கரைச்சி பிரதேச
சபையின் முன்னாள் உறுப்பினர் ச.ஜீவராசா, தாயக நினைவேந்தல் அமைப்பின் தலைவர்
முல்லை ஈசன், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும்
கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது முகநூல் பக்கத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
19 ஆண்டுகள் கடந்தும், இந்த சம்பவத்துக்கான நீதியும் பொறுப்புக்கூறலும் இதுவரை எவருக்கும் வழங்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்..