யாழ்ப்பாணம் – கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையின் பெயரினை யாழ்ப்பாணம்
நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என மாற்றம் செய்வதற்கான கலந்துரையாடலுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நாளைய தினம் (12) காலை 10 மணிக்கு
பெயர் மாற்றம் தொடர்பான கலந்துரையாடலும், பாடசாலை அபிவிருத்தி சங்க விசேட
கூட்டமும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பெயரை மாற்றுவது குறித்து ஜே-112 கிராம சேவையாளர்
பிரிவின் முதியோர் நலன்புரி சங்கத்தினால், கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி
வடமாகாண கல்வி அமைச்சுக்கும், அதன் பிறகு வடமாகாண ஆளுநருக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பெயர்
இது குறித்த பாடசாலை பழைய மாணவர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, “குறித்த பாடசாலையானது 1930ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன் ஆரம்ப பெயர் அறிய முடியாத நிலையில் 1962ஆம் ஆண்டு அரசாங்கத்தினால்
பாடசாலை சுவீகரிக்கப்பட்டதன் பின்னர், எமது அயல் ஊரான கல்வியங்காட்டின் பெயருடன்
பாடசாலையின் பெயர் அமையப்பெற்றதாக கூறப்படுகிறது.
எமது பாடசாலை அமைந்துள்ள காணி நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட
பகுதியில் காணியின் உறுதியில் நல்லூர் கோவில்பற்று, நல்லூர் இறை
என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. உறுதிகளில் இறை என குறிப்பிடப்பட்டுவது அந்த காணி அமைந்துள்ள ஊரின் அல்லது
கிராமத்தின் பெயரே.
கோப்பாய் பிரதேச செயலகம்
அதன் அடிப்படையில் பாடசாலை அமைந்துள்ளது நல்லூர்
கிராமத்தில், அத்துடன் இந்த காணியின் அமைவிடம் நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்கு
உட்பட்டது.

கல்வியங்காடு என்பது எமது அயல் கிராமம். அந்த கிராமம் வலி. கிழக்கு பிரதேச
சபையின் கோப்பாய் பிரதேச செயலகத்தின் ஆளுகைக்கு உட்பட்டது.
எமது பாடசாலை நல்லூர் பிரதேச சபை மற்றும் நல்லூர் பிரதேச செயலக ஆளுகைக்குள்
இருக்கும் போது, பாடசாலையின் பெயரின் முன்பாக கல்வியங்காடு என எமது அயல் ஊரின்
பெயர் காணப்படுவதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே எமது பாடசாலையின் பெயரை யாழ்ப்பாணம் நல்லூர் சைவத்தமிழ் கலவன் பாடசாலை என
பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறோம்“ என
மேலும் தெரிவித்தார்.


