தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் மக்களை இழிவுபடுத்தும் வகையில், கருத்து வெளியிட்டு வருவதாக தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குரங்கு இறைச்சி சாப்பிடும் அளவிற்கு இந்த நாட்டு மக்கள் தாழ்ந்து போகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறைச்சி இறக்குமதி
பேராசிரியர் எனக்கூறிக்கொள்ளும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ப்றொய்லர் இறைச்சி இறக்குமதியை நிறுத்தினால் குரங்கு, மயில் மற்றும் மர அணில் பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளதாக சமீர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பேராசிரியர் தனது பட்டச் சான்றிதழை இறைச்சி கடையில் பெற்றுக்கொண்டாரா தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக நாட்டு மக்களை மிகவும் மோசமாக மலினப்படுத்தி எள்ளி நகையாடியவர் கெஹலிய ரம்புக்வெல்ல மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளுக்கு அருகாமையில் சவப்பெட்டி கடைகள் காணப்படுவது மக்களுக்காகவே என கெஹலிய மக்களை இழிவுபடுத்தியிருந்தார்.
அதனைவிடவும் மோசமான வகையில் குறித்த பேராசிரியர் மக்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை
நாட்டில் இறைச்சி பற்றாக்குறை ஏற்பட்டால் மக்கள் குரங்கு, மயில் மற்றும் மர அணில் இறைச்சி சாப்பிடுவார்கள் என இந்த பேராசிரியர் குறிப்பிடுவதாகவும் இது மக்களை இழிவுபடுத்தும் ஓர் கூற்று எனவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அவ்வளவு தரம் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு தாம் ஆதரவு வழங்கிய போதிலும் அரசாங்கத்தின் சிலரது கருத்துக்கள் மக்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சமீர பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்து வெளியிட முன்னதாக அது குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிடுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்க வேண்டுமென கோருவதாகத் தெரிவித்துள்ளார்.