வடக்கு கிழக்கில் கடந்த காலங்களில் பொதுத் தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சி இம்முறை தேசிய மக்கள் சக்தியிடம் தோல்வி கண்டுள்ளது.
இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி கட்சியானது திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியை பின் தள்ளியுள்ளது.
திருகோணமலையில் தேசிய மக்கள் சக்தி 9705 தபால் மூல வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ள தமிழரசுக் கட்சி 1814 வாக்குகளையே பெற்றுள்ளது.
பாரிய வெற்றி
அதேவேளை வன்னியிலும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தபால் வாக்குகளில் மூன்றாம் இடத்தைப் பிடித்த தேசிய மக்கள் சக்தி, இம்முறை முதலாமிடம் பெற்றுக் கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி 9066 தபால் மூல வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ள நிலையில், 2582 வாக்குகளுடன் தமிழரசுக் கட்சி இரண்டாமிடத்தையே பிடித்துக் கொண்டுள்ளது.
அந்த வகையில் இம்முறை நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் தேசிய மக்கள் சக்தி பாரிய வெற்றியொன்றைப் பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.