தனது ஐந்து வயது மகளின் உடலை சூடான உலோகக் கரண்டியால் எரிகாயப்படுத்திய தாயொருவர் கண்டி காவல்துறைப் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், சந்தேக நபரான தாயாரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கண்டி மேலதிக நீதவான் வாசனா நவரத்ன, அவரை ஒக்டோபர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதன்போது, கண்டி – நாகஸ்தான பிரதேசத்தை சேர்ந்த தாயொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை விசாரணை
பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் எரிந்த காயங்கள் சுமார் இரண்டு அங்குல அளவில் காணப்பட்டதாகவும், சிறுமியின் உடல் முழுவதும் அதிக அளவில் தழும்புகள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தனது மகள் முன்பள்ளிக்கு செல்ல மறுத்ததால் தாயே குழந்தையை எரிகாயப்படுத்தியதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எரிகாயமடைந்த சிறுமி சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சட்ட வைத்தியரிடம் அனுப்பி அறிக்கையைப் பெற்றுக்கொள்ள காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ள சிறுமியின் தந்தை, சந்தேக நபரான தாயார் மகளின் உடலில் சூடுபடுத்தப்பட்ட எண்ணெயை வீசியதாகவும் சிறுமியின் உடலின் பல பாகங்களை எரிகாயப்படுத்தியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், கண்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் பணிப்புரையின் பேரில் பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.