கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சாரதியிடம் இருந்து கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த 17ஆம் திகதி பிள்ளையானின் சாரதியாக செயல்பட்ட நபர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சாரதி வாக்குமூலம்
வாழைச்சேனையை சேர்ந்த 41 வயதான சாரதி தற்போது பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த குற்றம் தொடர்பாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரையும், சாரதியையும் விசாரித்ததன் மூலமும், பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடத்தப்பட்ட பேராசிரியர் கொலை செய்யப்பட்ட இடங்களை குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தற்போது அடையாளம் கண்டுள்ளனர்.
கருணா – பிள்ளையான் கும்பல்
இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்திய பின்னர், நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் சம்பவ இடத்தில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
பிள்ளையானும் கருணாவும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் உருவாக்கப்பட்ட TMVP குழுவினர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.
கருணா – பிள்ளையான் தலைமையிலான குழுவின் செயற்பட்ட உறுப்பினர்கள் இவ்வாறான கடத்தல்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வாறானவர்கள் சுதந்திரமாக ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை பெற்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புலனாய்வு பிரிவு
2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத், கொழும்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்டார். இந்தக் கடத்தல் TMVPயின் வேலை என்று அப்போது கூறப்பட்டது.
இந்தக் கடத்தல் குறித்து ஆரம்பத்தில் முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்றாலும், சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை முறையாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட நபர் பிள்ளையான் ஆவார். பின்னர் அவரது சாரதி குற்றப் புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இந்தக் குற்றச் செயலில் வேறு ஒரு குழுவும் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்காலத்தில் அவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.