1990ஆம் ஆண்டு இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டு இன்னும் திரும்பாத தனது கிராம மக்களை கண்டுபிடித்து தருமாறு மட்டக்களப்பு சத்துருக்கொண்டானை சேர்ந்த வைரமுத்து குழந்தைவடிவேல் என்ற நபர் கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டு கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார்.
குறித்த முறைப்பாடு கடிதத்தில் மேலும்,
வைரமுத்து குழந்தைவடிவேல் ஆகிய நான் தங்களிடம் முறைப்பாடு செய்யும் விடயமாவது யாதெனில், கடந்த 09.09.1990 அன்று மாலை 5.30 மணியளவில் எமது கிராமம் இலங்கை இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தது.
இனப்படுகொலை
கிராம மக்கள் கைக்குழந்தைகளுடன் பெண்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், மற்றும் முதியவர்கள் உட்படப் பலர் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண்(BOYS TWON) இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டாராகள்.
அங்கு இலங்கையின் ஆயதப் படையினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் கூட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.
சத்துருகொண்டான் பிரதேசத்தில் இடம்பெற்ற இக்கொடூரமான இனப்படுகொலையின் போது, குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள். பெரியவர்கள், அங்கவீனர்கள் என 186 பேர் வெட்டியும் துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர் என இச்சம்பவத்தில் இருந்து உயிர் பிழைத்து தப்பிவந்த நபர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

இவர்களில் 38 பேர் சத்துருகொண்டானையும், 39 பேர் பனிச்சையடியையும், 62 பேர் பிள்ளையாரடியையும், 47 பேர் கொக்குவில் ஆகிய நான்கு கிராமங்களையும் சேர்ந்தவர்களாவர்.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்களின் தாயகப் பிராந்தியங்களான இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் நடத்தப்பட்ட பாரிய கூட்டுப் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவை 1997இல் ஆட்சியிலிருந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நிறுவினார்.
இந்த விசாரணையில் இலங்கை இராணுவத்தில் இருந்த மூன்று அதிகாரிகளான கெப்டன் வர்ணகுலசூரிய, கெப்டன் ஹேரத், கெப்டன் விஜயநாயக்க ஆகியோர் இந்த சத்துருக்கொண்டான் படுகொலைக்கு காரணமானர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
மேற்படி விசாரணைக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற நீதிபதி கே.பாலகிட்னர், இப்படுகொலைக்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாகவும், குற்றவாளிகளை பொறுப்பேற்குமாறும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வலியுறுத்தினார்.
மனித எச்சங்கள்
எனினும், அப்போதைய அரசாங்கம் இதற்கான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதனை இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகின்றோம்.
மேற்படி இலங்கை இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களில் எனது குடும்பத்தினை சேர்ந்த அப்பா. அம்மா, தங்கை, தம்பி எனது அக்காவின் பிள்ளைகள் மூவர், அம்மப்பா மற்றும் அம்மம்மா உட்பட 10 பேரும் உள்ளடங்குகின்றனர்.
எமது கும்பத்தினை சேர்ந்த உறவுகளுடன் அழைத்து செல்லப்பட்ட 186 பேரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை என்பதனை தங்களுக்கு தெரியத்தருகின்றேன்.
மேற்படி உனது உறவுகள் உட்பட எமது கிராமத்தில் உள்ள மக்களை கிராம சுற்றுவளைப்பின் ஊடாக மேற்படி இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட போது நானும் பயத்தில் ஒழிந்திருந்து பார்த்தேன் என்பதனையும் இந்த முறைப்பாட்டில் குறிப்பிட விரும்புகின்றேன்.

நான் எனது குடும்ப உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையினையும் அதற்கான நீதியினையும் பல வருடங்களாக தேடியும் கிடைக்கவில்லை.
எனவே எனது உறவுகள் உட்பட அனைவரும் சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண் (BOYS TWON) இலங்கை இராணுவ முகாமில் வைத்து வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டு உரிய பகுதியில் புதைக்கப்பட்டதாக உயிர் தப்பிய நபரின் ஊடாக கேட்டு அறிந்தோம்.
ஆகையால் எனது குடும்ப உறவுகளின் மனித எச்சங்களைக் கண்டு கொள்ள வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றது.
எனவே மேற்படி அழைத்து செல்லப்பட்ட எனது குடும்ப உறவுகள் உட்பட அனைவரினதும் உடல் புதைக்கப்பட்டுள்ள பகுதியான முன்னைய சத்துருக்கொண்டான் போய்ஸ் டவுண் (BOYS TWON) இலங்கை இராணுவ முகாம் அமைந்துள்ள பிரதேசங்களில் அகழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நான் தங்களிடம் முறைப்பாடு செய்கின்றேன் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.




