எரிபொருள் விநியோக நிறுவனம் ஒன்றுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, 30,000 மெற்றிக் தொன் எரிபொருளை நாட்டுக்கு இறக்குமதி செய்யவிருந்த கப்பலானது கையிருப்புடன் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் எரிபொருளை விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் இறக்குமதி செய்யப்பட்டவிருந்த 30,000 மெற்றிக் தொன் எரிபொருளையே இவ்வாறு இறக்குமதி செய்யமுடியாாத நிலை ஏற்பட்டுள்ளது.
எம்.டி. ஹஃப்னியா டாரஸ் என்ற கப்பல் இம்மாதம் 2ஆம் திகதி நாட்டை வந்தடைந்து, மீண்டும் 6ஆம் திகதி புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை அந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக உறுதியளித்த போதிலும், இதுவரை 70 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமையால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
குறித்த கப்பலில் 15,000 மெற்றிக் தொன் ஒக்டேன் 92 பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகவும், அந்த கையிருப்பு கிடைக்காத காரணத்தினால் கொலன்னாவ முனையத்தில் உள்ள ஒக்டேன் 92 பெட்ரோல் சரக்குகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஒக்டேன் 92 பெட்ரோலுக்கு தட்டுப்பாடுஏற்பட்டால் அதற்கு பதிலாக ஒக்டேன் 95 பெட்ரோல் மற்றும் 92 பெட்ரோலை விடுவிப்பதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.