கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியின் தாயும் சகோதரனும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று(25) கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொலை குற்றத்திற்கு உதவி
இதன்போதே கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இஷாரா செவ்வந்தியின் தாயான நீர்கொழும்பு, கட்டுவெல்லேகம, ஜயா மாவத்தையில் வசிக்கும் சேசத்புர தேவகே சமந்தி (48) மற்றும் சகோதரனான திவங்க வீரசிங்க பின்புர தேவகே(23), ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு கொலையைப் பற்றிய தகவல்களை அறிந்திருந்தும், மறைத்து குற்றத்திற்கு உதவியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல்
கொலையின் பின்னர் தாயும் சகோதரனும் கொலை மிரட்டல் காரணமாக தாங்கள் இருந்த வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணும் இக்கொலையின் துப்பாக்கிச் சூடு நடத்திய கமாண்டோ சமிந்துவும் கடந்த 15ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை திவுலப்பிட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த வேளையில் இந்த தாயும் அவரது சகோதரரும் அந்த விடுதிக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவருடன் இஷாரா செவ்வந்தியின் சகோதரர் மோட்டார் சைக்கிளில் பல்வேறு இடங்களுக்குச் சென்றதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.