Courtesy: Sivaa Mayuri
சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட போது பாரிய நிதி உதவிகளை வழங்கியமைக்காக தமது நாடு, இந்தியாவிற்கு எப்போதும் நன்றியுடையதாக இருக்கும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauf Hakeem) தெரிவித்துள்ளார்.
ஈழப் போருக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழுந்த போதிலும், தமது நாடு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது.
பொருளாதார நெருக்கடி
அந்த தருணத்தில்தான் இந்தியா இலங்கைக்கு பாரிய நிதியுதவியை வழங்கியது, கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டது.
எனினும் இந்தியாவில் இருந்து சரியான நேரத்தில் கிடைத்த உதவி மற்றும் ஆதரவின் காரணமாகவே, இலங்கை நெருக்கடியை சமாளிக்க முடிந்தது என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு சென்ற நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரவூப் ஹக்கீம், காற்றாலை மின்சார நிலையங்களை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்தார்.
ஜனநாயகம் வெற்றி
நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றது குறித்து அவரது பதிலைக் கேட்டபோது, இந்தியாவில் யார் ஆட்சிக்கு வந்ததை விட, அதன் ஜனநாயகம் வெற்றி பெற்றமையை தாம் உணர்ந்ததாக ஹக்கீம் கூறினார்.
இந்தியா ஒரு பரந்த நாடாக இருந்தாலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி பல கட்டங்களாக தேர்தல்கள் சுமுகமாக நடத்தப்பட்டுள்ளன.
மோடியின் கட்சி மத்தியில் ஆட்சியை அமைத்திருந்தாலும், ஜனநாயகத்திற்கு நல்லதொரு முன்னறிவிப்பு அளிக்கும் வலுவான எதிர்க்கட்சி உருவாகியுள்ளது
அத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, தமிழ்நாட்டில் அமோக வெற்றி பெற்றுள்ளது என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் பெற்ற வெற்றி உண்மையில் ஒரு சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.