‘பெளத்த மதகுரு தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை’ என்ற பிக்கு ஒருவரின் வாதம், தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன், பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், வெளியாகியிருந்த சமூக வலைதள காணொளி ஒன்றில், மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் பயணித்த பிக்கு ஒருவர் பொலிஸாரிடம் நடந்து கொண்டிருந்த விதம் முகம் சுளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
குறித்த பிக்கு, தலைக்கவசம் அணியாததன் காரணமாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக பொலிஸார் முற்பட்டுள்ள போது பிக்கு மிகவும் மோசமான விதத்தில் பதிலளித்துள்ளார்.
பௌத்த மதகுருக்கள்
இதன்போது அவர், ‘பெளத்த மதகுரு தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை’ என்று பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொலிஸாரை நோக்கி, “நீங்கள் இலங்கையர் தானே? இங்கு எங்களுக்கென்று வரப்பிரசாதங்கள் உள்ளன. எனவே நாங்கள் நாட்டின் சாதாரண சட்டதிட்டங்களை பின்பற்ற வேண்டியதன் அவசியமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், யாராக இருந்தாலும், சட்டம் அனைவருக்கும் சமம் எனவும் அவற்றை அனைவரும் பின்பற்றப்பட வேண்டியது அவசியம் என்னும் வகையிலும், பொலிஸார் பிக்குவை அறிவுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், அந்த பிக்கு, தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பௌத்த மதகுருக்களாக இருப்பவர்கள் அவ்வாறு இருக்க தேவையில்லை என்பது போலவே நடந்து கொண்டுள்ளார்.
நாட்டில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்படுகின்ற சட்டங்கள், மக்களுக்கான பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கிலேயே முன்வைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சாதாரணமாகவே, மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள், தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்பது அவர்களின் பாதுகாப்பு கருதி மாத்திரமே வலியுறுத்தப்படுகின்றது.
இதனை ஒவ்வொரு சராசரி நபரும் அறிந்திருக்க வேண்டிய நிலையில், சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நிலையில் உள்ள நபர், சரியாக புரிந்து கொள்ளாதிருப்பது உண்மையில் கவலையளிக்கின்றது.
இந்தப் பிக்குவின் இந்த செயற்பாடு தொடர்பான காணொளியை பொலிஸார் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதுடன் நாட்டில் அனைவருக்கும் சட்டங்கள் சமநிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், பொது இடத்தில் ஒரு பௌத்த பிக்கு இவ்வாறு நடந்து கொள்வதென்பது ஏற்கத்தக்கது அல்ல. இது சமூகத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் தனித்துவத்தை இல்லாது செய்கின்றது.
வரப்பிரசாதங்கள்
அத்துடன், இது அரசாங்கம் வழங்கும் வரப்பிரசாதங்களை தவறான முறையில் பயன்படுத்துவதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் உள்ளது என்பதில் சந்தேகமேயில்லை.

இச்சம்பவம் மாத்திரமல்லாமல், பௌத்த பிக்குகளின் மோசமான நடத்தைகளுக்கு இன்னும் ஏராளமான சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.
அந்தவகையில், அண்மையில், மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதியான அம்பிட்டியே சுமணரத்ன தேரர், அரச வங்கி ஒன்றில் மிக அடாவடியாக செயற்பட்டிருந்தமை தொடர்பான காணொளி ஒன்றும் வெளியாகியிருந்தது.
அதில், குறித்த பிக்கு வங்கி ஊழியர்களிடம் கத்தி சத்தமிட்டு பேசியதுடன், அவர்களை மிரட்டும் வகையிலும் அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டிருந்தார்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
இந்நிலையில், நாடளாவிய ரீதியில் அனைவரும் இது மாதிரியான செயற்பாடுகளுக்கு கடும் கண்டனங்கள் எழுப்பி வருகின்றனர்.
இருப்பினும், நடவடிக்கைகள் ஏதுமே எடுக்கப்படாத நிலையில், இன்று வரையிலும் இது போன்ற ஏற்கத்தகாத சம்பவங்களும் பிக்குகளின் மோசமான செயற்பாடுகளும், இனவாத கருத்துக்களும் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன.
தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கும், இவ்வாறான பௌத்த பிக்குகளின் நடத்தை குறித்து அரசாங்கம் எவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என்பது தொடர்பான கேள்விகள் பலரிடத்திலும் காணப்படுகின்றன.

இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒக்டோபர் மாத்தில் இனி இலங்கையர் தினம் என்ற ஒன்று கொண்டாடப்படும் எனவும், இதன்போது அனைவரும் சமமாக இருந்து கொண்டாட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அதற்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவே நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.
ஆனாலும், இலங்கையர் தினம் என்று ஒற்றுமையாகக் கொண்டாடுவதற்கு முன்னர் இவ்வாறான அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
உண்மையில், நாட்டின் அடிமட்ட நிலைமை ஒரு சீராக இல்லாத நிலையில், அரசாங்கம் முதலில் மிகுந்த கவனம் கொண்டு செயற்பட வேண்டிய விடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sajithra அவரால் எழுதப்பட்டு,
11 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>

