விவசாயிகள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை வழங்குமாறு தமிழரசுக்
கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(09) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“விவசாய மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நெற்செய்கைக்கு மேலாக உப உணவுப் பயிர்களான
சின்ன வெங்காயம், வேதாளக்காய் வெயங்காயம், உருளைக்கிழங்கு, திராட்சை, கரட்,
கரணைக்கிழங்கு, பீற்றூட், வாழை, மரவள்ளி, மிளகாய் போன்ற பயிர்கள் வலிகாமம்
வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வடமராட்சி தெற்கு மேற்கு,
வடமராட்சி கிழக்கு, தீவகம், தென்மராட்சி போன்ற பெரும் பிரதேசங்களின்
பேரூர்களில் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன.
விவசாயிகளின் வாழ்வாதாரம்
குறிப்பாக, இவ்வூர்களில் வாழும் விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து,
அறுவடை செய்யும் போது இறக்குமதி வரி விதிப்பு செய்யப்படுவது வழமை. ஆனால் கடந்த
மூன்று வருடங்களாக இவ்வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

காலநிலைப்
பாதிப்புகளையும் கடந்து உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் யாழ்ப்பாண
விவசாயிகளின் நடைமுறை இடர்பாடுகள் எவை என்பதையும், யாழ்ப்பாணச் சின்ன
வெங்காயத்துக்கான கேள்வி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த இரண்டு
வருடங்களாக உற்பத்திக்கான மானிய அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு
கிடைக்கப்பெறவில்லை. இத்தகைய காரணிகளால் விவசாயிகளின் வாழ்வாதாரம்
முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சின்ன
வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலத்தில், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில்
அரசால் இறக்குமதிகளுக்கு எதிரான வரி விதிக்கப்படுமா? என்பதையும், கடந்த மூன்று
ஆண்டுகளாக ஏன் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்
அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

