Courtesy: Courtesy: தீபச்செல்வன்
போருக்குப் பின்னரான சூழலில் இலங்கையின் (Sri Lanka) நடவடிக்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்பதை ஐக்கிய நாடுகள் சபை (UN) அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கை தெளிவுபடுத்தி நிற்கின்றது.
தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தல், இனப்படுகொலையாளிகளுக்க உயர்பதவிகளை வழங்குதல், அடிப்படைச் சுதந்திரம் கேள்விக்குள்ளான நிலை என்பன தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை பெரும் கவலையை வெளியிட்டிருக்கிறது.
இதனால் இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் முகம் கொடுக்கும் அவல நிலைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட போதும் இலங்கை குறித்த ஐ.நாவின் அணுகுமுறையும் இந்த நிலை நீளுவதற்கும் காரணமாக இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபை
இலங்கையின் நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் இலங்கை குறித்த முழுமையான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Turk) வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராணுவம் தன்வசம் வைத்திருக்கும் காணிகளை விடுவிப்பதுடன் புதிதாக காணிகளை கைவசப்படுத்துதலை நிறுத்தவேண்டும் என்ற விடயம் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இலங்கை இராணுவத்தினர் தம் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களில் தொடர்ந்தும் இராணுவ கட்டமைப்புக்களை விஸ்தரிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளிநொச்சியில் (Kilinochchi) சந்திரன் பூங்கா அமைந்திருந்த இடத்தை இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அதில் போர் முடிந்த கையுடன் பாரிய போர்வெறிச்சின்னம் அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது அங்கு இராணுவத்தினர் தென்னிலங்கையில் இருந்து வரும் மக்களுக்காக இராணுவப் போர் வெறியை ஊட்டுவதற்காக அந்தப் பகுதியை விஸ்தரித்து வருகின்றனர்.
சிறுவர்களுக்கான பூங்கா
அந்த இடத்தை மக்களிடம் கையளித்து முன்னர் போன்று சிறுவர்களுக்கான பூங்கா ஒன்றினை அமைக்க வேண்டும் என்று கிளிநொச்சியில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை இராணுவம் தன்வம் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்க வேண்டும் என்றும் வடக்குகிழக்கில் புதிதாக காணிகளை கைவசப்படுத்தலை நிறுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடரும் மேலும் பல அவலங்களையும் ஐ.நா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நினைவேந்தல் முயற்சிகளில் ஈடுபடுவதை குற்றச்செயல்களில் இருந்து நீக்கி, அவற்றுக்கு ஆதரவளித்தல் போன்ற நம்பிக்கையை கட்டியெழுப்பும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நிலைமாற்றுக்கால நீதிக்கான சூழலை உருவாக்கவேண்டும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் வலியுறுத்தி இருக்கின்றார்.
அதேபோன்று மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தக்கூடாது அவர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதும் ஐ.நாவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. போரில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதிக்காக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
மக்களின் போராட்டம்
அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலைக்காகவும் இரண்டாயிரம் நாட்கள் கடந்தும் மக்களின் போராட்டம் நீள்கின்றது. ஆனால் இலங்கை அரசோ போரில் அநீதிகளை இழைத்தவர்கள் என சந்தேகிக்கப்படுவர்களுக்கும் போரில் தாம் இழைத்த அறமீறல்களை வீரமாக சித்திரிப்பவர்களுக்கும் உயர்பதவிகளை வழங்கி வருகின்றது.
ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிச் செயல்களில் ஈடுபடுதல்தான் வீரம் என காட்டப்படுகிறதா என்பதே இங்கு எழும் கேள்வியாகும். ஐ.நா தனது அறிக்கையில் அரசாங்கத்தின் உயர்பதவிகள்,பாதுகாப்புதுறை, இராஜதந்திர பதவிகள்,என்பவற்றை வகிக்கும் நபர்கள் மீது மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகத்தன்மை மிக்க குற்றச்சாட்டுகள் வெளியானால், அவர்களை அதிகாரத்திலிருந்து நீக்குதலை முன்னெடுக்கவேண்டும் என்றும் மேலும் அத்தகையவர்களை நியமனம் செய்தலை தவிர்க்கவேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றது.
அத்துடன் நிலைமாற்றுக்கால நீதியை ஏற்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பில் அவ்வாறான நபர்கள் இடம்பெற்றிருந்தால் அவர்களை நீக்கவேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
இதேவேளை இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களையும் படைப்பாளிகளையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களையும் அச்சுறுத்தும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் உடனடி தடைவிதிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக முன்வைக்கப்படும் சட்டவாக்கம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்துடன் பொருந்திச்செல்வதாக காணப்படவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப் பிரிவின் விசாரணை இப் பத்தியை எழுதும் என்னில்வரை தொந்தரவளித்து வரும் நிலையில் தமிழர் தாயகத்தில் பல்வேறு பிரசைகள்மீதும் அழுத்தங்களை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையை குலைத்து வருகின்றது. இதனை நீக்கும் வகையில் ஶ்ரீலங்கா அரசு எந்தவொரு தீர்மானத்தையும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.
கைதிகளுக்கெதிரான சித்திரவதைகள்
அரசு தன்னிச்சையாக மக்களைக் கைது செய்து காவலில் வைத்திருந்தமை, கைதிகளுக்கெதிரான சித்திரவதைகள் அதனால் ஏற்பட்ட மரணங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பல தசாப்த கால உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவடைந்ததிலிருந்து, இலங்கை தனது 22 மில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய இராணுவத்தை பராமரித்து வருகிறது என்றும் ஐ.நா கூறியுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் புதிதாக அதிகாரத்தை கைப்பற்றும் ஜனாதிபதி இலங்கையில் அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கும்,இலங்கைப் போர் தொடர்பான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பனவற்றை மேம்படுத்துவதற்கும் தேவையான அடிப்படையான அரசியல் யாப்பு மற்றும் நிறுவனரீதியான சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இலங்கையின் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத்தில் இனப்பிரச்சினையை தீர்க்கும் பல்வேறு விடயங்களுடன் தொடர்புபட்ட போதும் தனது ஆட்சியின்போது இனப்பிரச்சினை விடயத்தில் எந்த விதமான நம்பிக்கை தரும் செயற்பாட்டையும் கருத்தையும் வெளியிடவில்லை என்பது அவதானிக்க வேண்டிய விடயம்.
இலங்கையின் ஜனாதிபதிபகள் பேரினவாத எண்ணங்களுக்கு உடன்பட்டு அவற்றை இன்னும் வளர்ப்பவர்களாக இருக்கின்றனர். அத்துடன் தமிழர்களை தமது பிரஜைகளாக ஏற்று அவர்களின் கோரிக்கைகளை ஏற்காமையினால் தமிழர்கள் தொடர்ந்தும் இலங்கை ஜனாதிபதிகள்மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். இதனால்தான் அவர்கள் சர்வதேச தலையீடு மற்றும் நீதிப் பொறிமுறையையும் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு,
23 August, 2024 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>