அமெரிக்காவின் (United States) எப் 35 பி போர் விமானங்களை வாங்கும் முடிவில் இருந்து உலக நாடுகள் பின் வாங்கி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவசர தரையிறக்கம், தொடரும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக இந்நடவடிக்கை எடுக்ககப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம், ரேடாரில் கண்டறிய முடியாத ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன் உலகின் மிக விலை உயர்ந்த விமானம் என்பதால் இதில் இருக்கும் தொழில் நுட்பங்களை நிறுவனம் ரகசியமாக பாதுகாத்து வருகின்றது.
போர் விமானம்
இந்தநிலையில், விலை மதிப்பு கொண்ட இந்த விமானங்கள், சமீப காலமாக அடிக்கடி பழுதாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரிட்டன் கடற்படை பயன்படுத்தி வரும் இந்த வகை விமானம் கடந்த மாதம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர், 25 பிரிட்டன் பொறியாளர் குழு, திருவனந்தபுரத்திற்கு வந்து, விமானத்தில் பழுதை நீக்க கிட்டத்தட்ட 37 நாட்களுக்குப் பிறகு அந்த விமானம் தாயகம் திரும்பியது.
பாதுகாப்புத்துறை
இதேபோன்று ஒரு சம்பவம் ஜப்பானின் கிரிஷிமா நகரில் உள்ள ககோஷிமா விமான நிலையத்தில் நிகழ்ந்த நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த அதே வகை போர் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதனால் ககோஷிமா விமான நிலைய ஓடுபாதை சிறிதுநேரம் மூடப்பட்டதுடன் இதை ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்து, விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதாக தெரிவித்தது.
தற்போது அந்த கோளாறு சரி செய்யப்பட்டு வருவதுடன் இரு வார கால இடைவெளியில் இந்தியா மற்றும் ஜப்பான் என இரு நாடுகளில் உலகின் மேம்படுத்தப்பட்ட போர் விமானம் பழுது காரணமாக தரையிறங்கி இருக்கின்றது.
2018 ஆம் ஆண்டு முதல் இதுபோல் 12 தொழில்நுட்பக் கோளாறு சம்பவங்கள் இந்த வகை விமானத்துக்கு நிகழ்ந்துள்ள நிலையில், இது அமெரிக்க பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கும் மற்றும் குறிப்பாக லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்துக்கும் பெரிய பின்னடைவாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
.