தொல்பொருள் திணைக்களத்திற்கு உரித்தான வீலஉட பகுதியில் பழங்கால பொருட்களை பெறும் நோக்கில் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நவ குறுந்துவத்த காவல்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
சம்பவத்துடன் தொடர்புடைய மூவரும் நீர்கொழும்பு மற்றும் மீதலாவ பிரதேசங்களைச் சேர்ந்த 29, 39 மற்றும் 55 வயதுடையவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, பாதாள உலக கும்பலை சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்கள் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் (Special Task Force) கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படை
தெஹிவளை (Dehiwala) காவல்துறை பிரிவுக்குட்பட்ட மெதவல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஆண் ஒருவரும் 67 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 06 கிராம் 950 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 01 கிராம் 190 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 40 போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.