மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நான்காவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று (5) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஏனைய மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் கிழக்கு மாகாணத்தில் மட்டும் நியமனங்கள் வழங்கப்படாத நிலை காணப்படுவதாகவும் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் உட்பட அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகள்
இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு போராட்டம்
முன்னெடுக்கப்பட்டதுடன் சிலர் தமது கைக்குழந்தைகளுடன் இந்த போராட்டத்தில்
கலந்துகொண்டனர்.
இதன்போது, வேலையற்ற பட்டதாரிகள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில் உரிமை
இந்த நிலையில், பெற்ற பட்டம் எமது வாழ்விற்கு ஏணியாகுமோ அல்லது நாளை காகித
ஓடமாகுமோ,பட்டத்தினை பரணில் வைக்க பயனில்லா உயர் கல்வி எதற்கு, யாருக்கும்
பயனற்ற பல்கலைக்கழக பட்டம் எதற்கு,கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா போன்ற
வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எங்களது தொழில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வரையில் தமது போராட்டம் தொடரும் என இங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.