ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) ஐக்கிய மக்கள் சக்தியும் (sjb)இணைவதற்கான காலம் கடந்துவிட்டாலும், தாமதமாகிவிட்டாலும் தற்போது இணைவதற்கான இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவது நல்லது என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் (Thibbatuwawe Sri Siddhartha Sumangala Thero) தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரள இன்று (30) மல்வத்த மகா விஹாரைக்குச் சென்று தேரரைச் சந்தித்து ஆசி பெற்ற போதே மகா நாயக்க தேரர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுவான நிகழ்வாகிவிட்ட கட்சிப் பிளவுகள்
இன்றைய காலகட்டத்தில் கட்சிப் பிளவுகள் ஒரு பொதுவான நிகழ்வாகிவிட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமல்ல, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உட்பட பல கட்சிகளும் இரண்டு அல்லது மூன்று கட்சிகளாகப் பிரிந்துள்ளதாகவும் வணக்கத்திற்குரிய தேரர் வலியுறுத்தினார்.
முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி இணைவது குறித்து பேசப்பட்டிருந்தாலும், அது வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
குறைபாடுகளால் தள்ளிச் செல்லும் இணைவு முயற்சி
இந்த நிகழ்வில் பேசிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல,(thalatha atukorale) 2020 ஆம் ஆண்டில் தனிக் கட்சியாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்ட பிறகு மீண்டும் ஒன்றிணைவது குறித்து பேசப்பட்டாலும், இரு தரப்பிலும் உள்ள சில குறைபாடுகள் காரணமாக அது நாளுக்கு நாள் பின்தங்கி வருவதாகக் கூறினார்.
நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தபோது, இரு கட்சிகளும் பதவிகளையும் வெற்றிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டையும் மக்களையும் கவனித்துக் கொள்ள ஒன்றிணைந்திருக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மல்வத்து மகா தேரரிடம் மேலும் வலியுறுத்தினார்.