அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹன்டர் பைடனுக்கு (Hunter Biden) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ( Joe Biden) பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை, போலி தகவல் வழங்கியது,வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனை குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றம் அறிவித்தது.
பொது மன்னிப்பு கொடுக்கும் ஆவணங்கள்
இந்நிலையில், ஜோ பைடன் தனது அறிக்கையில், தனது மகன் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நியாயமற்ற முறையில் வழக்குத் தொடுக்கப்பட்டதால் தாம் மன்னிப்பு வழங்க முடிவு செய்ததாகக் கூறியுள்ளார்.
மேலும், ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு கொடுக்கும் ஆவணங்களில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார்.
எனினும், ஜனாதிபதி பைடனின் இந்த முடிவு அவரது மகன் தொடர்பான நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்ற அவரது முந்தைய உறுதிப்பாட்டிற்கு முரணானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.