அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இலங்கை இரண்டு சுற்று மெய்நிகர் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சருமான அனில் ஜயந்த (Anil Jayanta) தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதற்கான திட்டங்களை வகுக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட குழுவால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நிலைப்பாட்டை கோடிட்டுக் காட்டும் இரண்டாவது கடிதமும் வாஷிங்டனில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜயந்த கூறியுள்ளார்.
இராஜதந்திர ஈடுபாடு
குறித்த கலந்துரைாயாடல்களில் வர்த்தக இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை இலங்கை முன்வைத்ததாக தெரிவித்த அமைச்சர், இந்த விவகாரத்தில் மேலும் கலந்துரையாடல்களை கோரியதாகவும் நிதி அமைச்சு அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இராஜதந்திர ஈடுபாடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் சென்று ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இலங்கை தூதுக்குழுவை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் அனில் ஜயந்த கூறியுள்ளார்.