“எங்களை இனவாதிகள் என்று முத்திரை
குத்தாமல் எங்கள் உணர்வுகளை மதித்து அபிலாஷைகளைக் கருத்தில் எடுத்து
தீர்மானத்துக்கு வர வேண்டும் எனப் பொறுப்போடு ஜனாதிபதியையும் அரசையும்
கேட்டுக்கொள்கின்றோம்.” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம்
தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,”அரசின் பார்வையில் நாங்கள் இனவாதிகள். ஜனாதிபதிக்குரிய மரியாதையாகச் சொல்ல
விரும்புகின்றேன். நான் மட்டுமல்ல, இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஏனைய
தமிழ்க் கட்சிகள் எதுவுமே இனவாதக் கட்சிகள் அல்ல.
இனவாதம்
எங்களை இனவாதம் பேச வைத்தது
யார்? தென்னிலங்கை இனவாதிகளே.
1940 மட்டும் நாங்கள் தமிழ்த் தேசம் கேட்டமா? 1920 பண்டாரநாயக்க சமஷ்டி
கேட்ட போது நாங்கள் அதை வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தோம்.
சிங்களம் மட்டும் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது ஐக்கிய தேசியக் கட்சியில்
இருந்து வெளியேறியது சாணக்கியனின் பேரனார் இராசமாணிக்கம்.

அப்போது முரண்பாடு
ஆரம்பித்தது நீங்களே. நீங்கள்தானே இனவாதம் பேசினீர்கள். நாங்கள் இனத்துவமே
பேசினோம். இனவாதம் பேசவில்லை.
மலையக மக்களின் பிரஜாவுரிமைகளைப் பறித்தமை, சிங்களம் மட்டும் சட்டம் என ஒவ்வொரு
சட்டத்தையும் கொண்டு எம்மைத் தள்ளுகின்ற போதும் நாங்கள் இனவாதம் பேசவில்லை.
சிங்கள மக்களின் இனவாதத்தின் அடிப்படையில் அதை எதிர்கொள்வதற்குப்
பாதுகாப்பதற்குமான உரிமைகளைக் கேட்கின்றோமே தவிர இங்கு நாங்கள் நிச்சயமாக
இனவாதம் பேசவில்லை.
பிரிவினை
தமிழ்க் கட்சிகள் இனவாதம் பேசுவதில்லை. நாங்கள் இலங்கையர்கள்தான். அதில்
எந்தச் சந்தேகமும் இல்லை. அதனால் நாம் இலங்கைத் தமிழர்கள், எமக்கென்று
கலாசாரம் , மொழி, இனம், நிலம் இருக்கின்றன.

பிரிந்து போக நாம் விரும்பவில்லை. நாங்கள் பிரிவினையையும் கேட்கவில்லை.
இனவாதம் என்ற வரையறைக்குள் தமிழ் மக்களைச் சேர்க்காமல், தனியே இலங்கைத்
தேசியம் என்ற கருத்தியலுக்குள் நாங்கள் கரைந்து வழிந்து போக விரும்பவில்லை
என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தயவு செய்து ஜனாதிபதியிடமும் அரசிடமும் நாம் கேட்டுக்கொள்வது நாம் சந்திப்பை
கோரவிருக்கின்றோம். எங்கள் அடிப்படை உரிமைகளை ஆற அமர இருந்து ஆராய்ந்து
பார்த்து எங்களோடு தனியாக மட்டுமல்ல தமிழ் பேசும் பிரதிநிதிகளுடன்
இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான முயற்சியைச் செய்ய வேண்டும்.
எங்களை இனவாதிகள் என்று முத்திரை குத்தாமல் எங்கள் உணர்வுகளை மதித்து
அபிலாஷைகளைக் கருத்தில் எடுத்து தீர்மானத்துக்கு வர வேண்டும் எனப் பொறுப்போடு
அரசையும் ஜனாதிபதியையும் கேட்டுக்கொள்கின்றோம்.”என தெரிவித்தார்.

