கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவமொட்டாவ பகுதியில், வீதித் தடையொன்றின் அருகே போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, அந்த ஆயுதத்துடன் சந்தேகநபர் தப்பியோடியுள்ளதாகக் கட்டுநாயக்க பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை (15) மாலை 3.50 மணியளவில், போதைப்பொருள் வியாபாரி ஒருவரைக் கைது செய்வதற்காகக் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் சென்றிருந்தனர். அங்கு அவர்களுக்கும் சந்தேகநபருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது, குறித்த வியாபாரி பொலிஸ் அதிகாரியின் கைத்துப்பாக்கியைப் பறித்து அவர் மீது சூடு நடத்தியுள்ளார்.
இதனையடுத்து, அருகிலிருந்த வீதித் தடையின் பணியில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விரைந்த போதிலும், அதற்குள் அந்தப் போதைப்பொருள் வியாபாரி தப்பியோடியுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி மீனுவாங்கொட ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய போதைப்பொருள் வியாபாரியையும், அவர் பறித்துச் சென்ற கைத்துப்பாக்கியையும் தேடி, கட்டுநாயக்க பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.

