நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்குப் பின்னர் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில், பூஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக காலி, கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 1,033 கைதிகள் பிற சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், இந்த மோதலை வழிநடத்தியதாகக் கூறப்படும் கட்டுவெல்லேகம சுரேஷ் என்பவரும் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக 27 உயிர்கள் பலியாகியுள்ளதுடன், அவர்களில் 7 பேர் சிறைச்சாலைகள் அதிகாரிகள் ஆவர்.
இதேவேளை நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பயங்கர வன்முறைச் சம்பவங்களில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
வைத்தியசாலையின் 72 மற்றும் 79 ஆம் இலக்க விடுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றுக்குச் சென்ற அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகளைச் சந்தித்து அவர்களின் உடல்நலம் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவச் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அத்துடன், காயமடைந்தவர்களுக்கான தற்போதைய சிகிச்சைகள், அவசர தேவைகள் மற்றும் இதர ஆதரவு சேவைகள் குறித்து வைத்தியசாலை நிர்வாகத்தினர், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரிகளுடன் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விசேட கலந்துரையாடலொன்றையும் மேற்கொண்டார்.
சுகாதார அமைச்சின் உத்தியோகபூர்வ தகவல்களின்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்த 29 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 15 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்பதுடன், ஏனைய 14 பேர் கைதிகள் ஆவர்.
சிகிச்சை பெற்று வருபவர்களில் 12 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (08) முற்பகல் 7.30 மணிக்கு விசேட கூட்டமொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.


Source: https://samugammedia.com/boos-prisoners-transferred-to-angunukolpeles-prisons-have-died-1783489738

