யாழ்ப்பாணம் வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி வருகின்றனர்.
கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள காணிகளில் 1661 ஏக்கர் காணி இராணுவத்தினருக்கு தேவை எனவும் , அவற்றுக்கான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் , வலி. வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது, தமது சுய தேவைக்கு எனவும் தெரிவித்திருந்தார்.
பிரதி அமைச்சரின் இக் கூற்றினை முற்றாக நிராகரித்த வலி.வடக்கு மக்கள் , தாம் தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டப்பட்டு, 36 வருடங்கள் கடந்த நிலையிலும் , எமது காணிகளை பாதுகாப்பு காரணம் எனக் கூறி அடாத்தாக கையகப்படுத்தி , அவற்றில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
நாம் எமது காணிகளை இழந்து வாழ்வாதாரங்களை இழந்து நிர்க்கதியாக நிற்கும் போது, எமது காணிகளில் விவசாயம் செய்யும் இராணுவத்தினர் விவசாய உற்பத்தி பொருட்களை பெருமளவில் விற்று இலாபம் ஈட்டுகின்றனர்.
இராணுவத்தினரின் இத்தகைய செயற்பாடானது, உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் பாதிக்கின்றது.
வலி.வடக்கில் இராணுவத்தினரின் விவசாய பண்ணைகளில் உற்பத்தியாகும் , விவசாய உற்பத்தி பொருட்களை பலாலி வீதியில் உரும்பிராய் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியின் மரக்கறி கொள்வனவு நிலையத்தில் இராணுவத்தினர் பெருமளவில் விற்பனை செய்து வருகின்றனர்.
மக்களின் காணி மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , கடந்த ஆட்சியாளர்கள் போன்று பொய்யுரைத்து மக்களை ஏமாற்றாது காணிகளை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

