நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை ஜனாதிபதி எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டத்தரணிகள் சங்கம், நீதிபதிகள், காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம், ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும், முதுநிலை மற்றும் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே தாம் தீர்மானங்களை எடுத்ததாக ஜனாதிபதி கூறுவது சந்தேகத்திற்குரியது என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகள் நீதித்துறையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படுகிறதா அல்லது மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சியா என்பது தெளிவாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேல் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாத்திரம் அதிகரிப்பது நீதித்துறையில் நிலவும் தேக்கநிலைக்கும் வழக்குகள் தாமதமாவதற்கும் தீர்வாகாது எனவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, தற்போதைய அரசாங்கம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கிராமப்புற மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், குறிப்பாக நெல்லை விற்பனை செய்ய முடியாமை, உரங்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமை மற்றும் வருமானம் வீழ்ச்சியடைந்தமை உள்ளிட்ட பிரச்சினைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், சேதமடைந்த வீடுகள் மற்றும் குளங்களை புனரமைப்பதற்கும் அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேவேளை, நாட்டில் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தனது தோல்விகளையும் தவறுகளையும் மறைப்பதற்காக தொடர்ந்தும் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
விவசாயத் துறைக்கு நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது வரவேற்கத்தக்கது எனக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, அது வெறும் பேச்சாக இல்லாமல் நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், அநுராதபுர மாவட்டத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காகவும் அவர்களின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பாரிய மாவட்டக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

