இஸ்ரேலில் இருந்து நெல் கொள்வனவுக்காக கொண்டுவரப்பட்ட 100 நடமாடும் நெல் களஞ்சியசாலைகள் காணாமல் போயுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க(S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் நெல் களஞ்சியசாலையானது குண்டு துளைக்காத, தீயிட்டு அழிக்க முடியாத, வெட்டி அழிக்க முடியாத மிகவும் பாதுகாப்பான களஞ்சியசாலை என திஸாநாயக்க கூறியுள்ளார்.
விவசாய நிலங்களுக்கு அருகில் நடமாடும் களஞ்சியசாலைகள் வைக்கப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டதாகவும், அப்போது சமுர்த்தி வங்கி தலையிட்டு நெல்லை கொள்வனவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
500 தொன் நெல்
ஒரு களஞ்சியசாலையில் 500 தொன் நெல் சேமிக்க முடியும் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க கூறியுள்ளார்.
நெல் சந்தைப்படுத்தல் சபை நலிவடைந்த சூழ்நிலையில் தான் சுபீட்ச அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது தலையிட்டு தான் இந்தக் களஞ்சியசாலைகளை கொள்வனவு செய்ததாக எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் களஞ்சியசாலைகள் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் பராமரிப்பில் இருக்க வேண்டுமெனவும், ஆனால் அண்மைக்காலமாக களஞ்சியசாலைகளின் எந்தப் பாவனையையும் காண கிடைக்கவில்லை எனவும், அவற்றுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.