Courtesy: ஊடகவியலாளர் அ.நிக்ஸன்
வட மாகாணத்தில் காணித் தீர்வு தொடர்பாக, 2025, மார்ச் 28 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் திரும்பப் பெற்றமை தற்போது இலங்கை அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
முன்னதாக, வட மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் காணிகளை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள காணி உரிமை தீர்வுத் திணைக்களைத்தால், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் வட மாகாண காணி தீர்வு குறித்து முன்னதாக சம்பந்தன் ஐயா கூறிய கருத்துக்கள் மற்றும் இந்த காணி பிரச்சினை குறித்து இலங்கை அரசாங்கத்தின் நோக்கம் எதுவாக இருந்தது என்பது தொடர்பில் ஊடகவியலாளர் அ.நிக்ஸன் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில்,”13 ஆவது திருத்தச் சட்டத்தை தமிழர்கள் தும்புத் தடியாலும் தொட்டுப் பார்க்கமாட்டார்கள்” என்று அமரர் சம்பந்தன் 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
13 ஆவது திருத்தச் சட்டம்
ஆங்கில மொழியில் உரத்த சத்தத்தில் சுட்டிக்காட்டிய சம்பந்தன், தமிழர்களின் அரசியல் போராட்டம் மற்றும் தீர்வுத் திட்டம் என்ற பெயரில் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறுகளை விளக்கியிருந்தார்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த தீர்வு திட்டம் தொடர்பான விவாதத்திலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு விபரித்திருந்தார்.
ஆனால், 2013 இல் வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுமாறு நீதியரசர் விக்னேஸ்வரனை கேட்டது, சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
கொழும்பில் உள்ள அவருடைய இல்லத்துக்குச் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.
காரண – காரிய விளங்கங்கள்
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளமை பற்றி அப்போது சம்பந்தன் கொடுத்த மிக நுட்பமான காரண – காரிய விளங்கங்களில் தவறான பல கற்பிதங்கள் இருந்தன.

1) 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி அதிகாரம் இருப்பது என்பது ஒரு வெறும் தோற்றம் (Mere Appearance) மாத்திரமே.
2) கொழும்பு அரச நிர்வாகத்தை மையமாகக் கொண்ட காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு, காணி பற்றிய முழுமையான தீர்மான அதிகாரங்களும் உண்டு.
3) காணி தொடர்பான தேசிய கொள்கை இதுவரை வகுக்கப்படவில்லை. மாகாண பிரதிநிதிகளை உள்ளடக்கிய காணி தொடர்பான ஆணைக்குழு இல்லை.
இந்த நிலையில் வடபகுதியில் பொது மக்களின் காணியை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டமையானது,
”எடுப்போம் -தருவோம் – மீளப் பெறுவோம்” என்ற அதிகார ஆணவத்தை வெளிக்காட்டியது எனலாம்.
ஏதோ சிங்கள மக்களின் காணிகளை தமிழர்களிடம் விட்டுக் கொடுப்பது போன்ற ஒரு பிரம்மையும் (Delusion) அதில் உண்டு.
இப் பின்னணியில் வர்த்தமானி அறிவித்தல் ரத்துச் செய்யப்பட்டமைக்கு சில தமிழ் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தமை அடிமைத்தன (Slavery) வெளிப்பாடு.
‘Assignment Colombo’ என்ற நூலில்…
அப்போது தூதுவராக இருந்த ஜே.என்.டிக்சிற் எழுதிய ‘Assignment Colombo’ என்ற நூலில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் தொடர்பான விபரங்கள் உண்டு.
குறிப்பாக வடக்கு கிழக்கு ”வரலாற்று வாழ்விடங்கள்” (Historic Habitats) என்றுதான் ஒப்பந்த்தில் இருப்பதாக டிக்சிற் தனது நூலில் விளக்குகிறார்.

”தமிழர்களின் தாயகப் பிரதேசம்” (The traditional homeland of Tamils) என்று ஒப்பந்தத்தில் எழுத ஜேஆர் விரும்பவில்லை. பிடிவாதமாக நின்றார்.
இதனால் ”Historic Habitats” என்ற வார்த்தையை தேடிக் கண்டு பிடித்து ஒப்பந்தத்தில் புகுத்தியதாக டிக்சிற் தனது நூலில் சுட்டிக்காட்டுகிறார்.
சிங்கள குடியேற்றத்துக்கு வசதியாகவே வரலாற்று வாழ்விடங்கள் என்ற வாக்கியம் கண்டுபிடிக்கப்பட்டது போலும்.
இப் பின்னணியில் காணி அதிகாரம் எம்மாத்திரம்? டிக்சிற் எழுதிய நூல் தமிழர்களுக்குச் சாதகமானது என்பது எனது வாதமல்ல.
ஆனால், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று ஒப்பந்தத்தில் இருப்பதாக அடிக்கடி எழுதும் சில தமிழ் ஆய்வாளர்கள் டிக்சிற்றின் நூலை வாசிக்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

