Courtesy: Sivaa Mayuri
2024 பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை இரவு 7:15 மணிக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றவுடன் அவை மீளப் பரிசோதிக்கப்பட்டு உடனடியாக ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகள் மூன்று கட்டங்களாக வெளியிடப்படும். இதன்படி முதலில் தொகுதி அளவிலும், பின்னர் மாவட்ட அளவிலும், அதன் பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியும் சுயேச்சைக் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
விருப்பத்தேர்வு
முடிவுகள் வெளியானதும் ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் விருப்பத்தேர்வு எண்ணும் பணி உடனடியாக ஆரம்பிக்கப்படும்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெறத் தகுதியான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விருப்பு வாக்குகள் மாத்திரமே எண்ணப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்ற, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் மையங்களின் வளாகத்தை விட்டு வெளியேறி விடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.