தற்போதைய அரசினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டமானது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) தேசியக் கொள்கைத் திட்ட வரம்புக்கு அப்பால் சென்றால் நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Wajira Abeywardana) தெரிவித்துள்ளார்.
காலியிலுள்ள (Galle) கட்சி அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த வருடம் நவம்பர் மாதத்திலேயே வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்திருக்க வேண்டும். மூன்று மாத தாமதத்தின் பின்னரே அதனை முன்வைக்கப் போகின்றனர்.
இந்தத் தாமதத்தால் ஏற்படக் கூடிய நஷ்டத்தை தவிர்த்துக்கொள்வது இலகுவான வியடம் அல்ல.
வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்தார்
அத்துடன் அரசாங்கம் நினைத்தவாறு வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது. ரணில் விக்ரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டெடுத்தார்.
முக்கியமான 92 சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்தே அவர் அதனை செய்தார்.
அந்த சட்டங்களுக்கு அமையவே இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதனை தவிர வேறு முறைகள் கிடையாது.
ஏதேனும் முறையில் இந்த சட்டங்களுக்கு புறம்பாக வரவு செலவுத் திட்டங்களை முன்வைத்தால் நாடு மீண்டும் வீழ்ச்சியடைந்த நாடாகும் என்பதனை உறுதியாக கூற முடியும்.
ஏற்கனவே வரவு செலவுத் திட்டத்தை கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவே பார்க்கின்றோம். அதேபோன்று பொருளாதார மேம்பாட்டு சட்டம்.
இந்த சட்டத்தின் கீழே வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டி இருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணை
இலங்கை மத்திய வங்கி சட்டம், ஊழல் எதிர்ப்பு சட்டம், ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான காரியாலயம் விரைவாக ஏற்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது.
திருடர்கள் என தெரிவித்து போதாது.
திருடர்களை சட்டத்தின் வரைபுக்குள் சிக்கவைத்துக்கொள்ள தேவையான பணிகுழு நியமிக்கப்பட்டு குறித்த காரியாலயம் பலப்படுத்தப்பட வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க கடந்த நவம்பர் மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அடுத்த தவணையை டிசம்பர் மாதமளவில் பெற்றுக்கொண்டு நாட்டை முன்கொண்டு செல்லவே எதிர்பார்த்தார்.
ஆனால் இந்த அரசாங்கத்தின் தாமதத்தால் பொருளாதார நெருக்கடி நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
இதனால் ரணில் விக்ரமசிங்கவினால் தயாரிக்கப்பட்டள்ள தேசிய கொள்கைத் திட்ட வரம்புக்குள் இருந்தே வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க வேண்டி இருக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அதனைத் தவிர வேறு வழியில்லை.
ஆனால் அரசாங்கம் சிலவேளை இந்த முறைக்கு மாற்றமாக வரவு செலவு திட்டத்தை முன்வைக்க முயற்சித்தால் நாடு மீண்டும் வீழ்ச்சிக்கே செல்லும்” என தெரிவித்தார்.