பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் இன்று (29.08.2025) வெள்ளிக்கிழமை மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்துவது, சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது தலைக்கவசம் அணியாது செல்வது , ஒரு மோட்டார் சைக்கிளில்
இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது,
காவல்துறை சோதனை
மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை ஓட்டிய சந்தேக நபர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தர ஆலோசனையில் அம்பாறை மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட காவல்துறை அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி நெறிப்படுத்தலில் அம்பாரை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனை தலைமையக காவல்நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம காவல்துறை பரிசோதகருமான பி.ரி நஸீர் உள்ளிட்ட காவல்துறையினர் இச்சோதனை
நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.