வரலாற்றுக் கதைகள் படிப்பவர்களுக்கு இந்த விஷயத்தைக் கற்பனை செய்வது சுலபமாக இருக்கும். அந்தக் காலத்தில் மன்னர்களின் கோட்டைகள் எதிரிப்படைகளால் முற்றுகை செய்யப்படுவதைப் படித்திருக்கலாம்.
சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருக்க, எந்த நிமிடத்திலும் தாங்கள் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற அச்சம் இருக்க, அந்தக் கோட்டைக்குள் வாழும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்?
அப்படியான ஒரு வாழ்க்கையை தான் 15 மாதங்களுக்கு மேலாக காசா மக்கள் வாழ்ந்தார்கள். 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 07ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடாத்தியது.
தொடர் குண்டுவீச்சு
இந்த தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 250 பேர் கடத்திச்செல்லப்பட்டனர். சுமார் 100 பணயக்கைதிகள் இன்னும் காசாவிற்குள் உள்ளனர், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியது. இதேநேரம் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களினால் 46.000ற்கும் அதிகமானவர் கொல்லப்பட்டுள்ளனர்.
110,000க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதுடன் 17,000 க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் குண்டுவீச்சுகள் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கியதுடன், காசாவில் இருந்த 23 லட்சம் மக்களில் 19 லட்சம் மக்களை இடம்பெயர்வதற்கும் காரணமாக அமைந்தது.
இஸ்ரேல் ஹமாஸ் மோதல் உக்கிரமமைந்த நிலையில் ஹமாசை அடியோடு ஒழிப்பதாக சூளுரைத்த இஸ்ரேல் ஹமாஸ் மீது கொடுர தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல்களில் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.
இஸ்ரேலிய பணய கைதிகள்
இவ்வாறான நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்த போர் நேற்று [19.01. முழுமையாக நிறுத்தத்திற்கு வந்தது. முதற்கட்டமாக இஸ்ரேலிய பணய கைதிகள் மூவரை ஹமாஸும், பாலஸ்தீனிய கைதிகள் 90 பேரை இஸ்ரேலும் விடுவித்தது. போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் காசாவில் தாங்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளை நோக்கி மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.
5 மாதங்களாக வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டில் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்த காசா மக்கள் கல்லாகவும் மண்ணாகவும் எஞ்சிய கட்டடங்களை கடந்து சிதிலங்களுக்கு ஊடாக தங்கள் வீடுகளின் எச்சங்களுக்குத் திரும்பத் தொடங்கினர். தெருக்களை சுத்தம் செய்து தங்கள் வாழ்வை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர்.
ஆனால் சேதங்கள் சரிசெய்யப்பட்டு காசாவில் மீண்டும் இயல்வு வாழ்க்கை திருப்புவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே நிதர்சனமான உண்மை.
ஐக்கிய நாடுகள் சபை
காசாவில் புனரமைப்பு பணிகளை நடத்தி முடிக்க 350 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் வெளியிட்ட தரவின்படி, காசாவில் உள்ள 69% கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
சுமார் 2,45,000 வீடுகள் உட்பட பல கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட லொறிகள் முழுநேர வேலை செய்தாலும், இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.
எது எவ்வாறு இருப்பினும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட இந்த கோர அழிவு வாரலாறுகளில் எப்போதும் கரைபடிந்த இரத்ததினால் எழுதப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.