யாழ். (Jaffna) வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள மிகுதி காணிகளை வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக கையகப்படுத்த அரசாங்கம் இரகசிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வலி, வடக்கு காணி விடுவிப்புக்கான அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
காணி விடுவிப்பு தொடர்பாக வலி, வடக்கு காணி விடுவிப்பிற்கான அமைப்பினர் நேற்று யாழ்.நகரிலுள்ள தனியார் விருந்தகத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
இதன்போது மேலும் அவர்கள் குறிப்பிட்டிருந்ததாவது,
2013ம் ஆண்டு வலி, வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுமார் 6317 ஏக்கர் காணியை வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அன்றைய அரசாங்கம் கையகப்படுத்த முயற்சி எடுத்தபோதும் அது கைகூடவில்லை.
அபகரிக்க அரசாங்கம் முயற்சி
பின்னர் ஒரு பகுதி மக்களின் நிலம் விடுவிக்கப்பட்ட போதும், பெருமளவு காணி தொடர்ந்தும் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் காணிகளை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அபகரிக்க அரசாங்கம் முயற்சிகளை எடுத்திருப்பதாக அறியமுடிகிறது.
2013ம் ஆண்டு மக்களின் காணிகளை அபகரிக்க அன்றைய அரசாங்கம் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பும் இரத்துச் செய்யப்படாமல் உள்ளது. இதற்கிடையில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு பாதுகாப்பு அமைச்சில் இருந்து தகவல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில் வலி,வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடமிருந்த 6317 ஏக்கர் காணியில் விடுவிக்கப்பட்ட காணிகள் தவிர்ந்த எஞ்சியவற்றை புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்றின் ஊடாக சுவீகரிக்க எடுத்துள்ள முயற்சிகள் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் கடந்த மாதம் 15 ஆம் திகதி வலி, வடக்கு மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பாகவும், 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்யகோரியும் போராட்டம் நடத்தினோம்.
மக்களின் கோரிக்கை
மக்களின் கோரிக்கைக்கு 14 வேலை நாட்களில் பதில் கிடைக்கும் என கூறிய ஜனாதிபதி செயலகம் 22 நாட்கள் கடந்தும் எமது கோரிக்கைக்கு பதில் தரவில்லை. கடந்த வார இறுதியில் 8 தூதரகங்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கு சென்று விடயத்தை தெரியப்படுத்தியுள்ளோம்.
வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும் போது வலி,வடக்கு காணிகள் விடுவிப்பு தொடர்பில் பல தகவல்கள் மறைக்கப்பட்டதை அறிந்து கொண்டோம். அண்மையில் விடுவிக்கப்பட்ட பலாலி வீதி முழுமையாக விடுவிக்கப்பட்டதாக தூதுவர்கள் கூறினார்கள்.
ஆனால் நேர கட்டுப்பாடு உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதை நாங்கள் கூறினோம். வலி,வடக்கில் கணிசமான காணிகளை அரசாங்கம் விடுவித்ததாக கூறினார்கள்.
2013ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் அவர்களுக்கு ஏதும் தெரியாத நிலையில் அவற்றின் பிரதிகளை காண்பித்து மக்களின் காணி இன்னும் சட்டரீதியாக மக்களுக்கு சென்றடையவில்லை என்பதை ஆதாரத்துடன் கூறினோம்.
அபகரிக்க அரசாங்கம் முயற்சி
இலங்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சென்றோம் வலி வடக்கு காணி தொடர்பில் ஏன் அடிப்படை மனித உரிமைகள் மீறல் இடம்பெற்றுள்ள நிலையில் தாங்கள் ஏன் சம்பந்தப்பட்ட தரப்பின ருக்கு அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பினோம்.
அவர்களும் அப்போதுதான் விவரங்களை கேட்டார்கள் அவர்களிடம் விவரத்தை கொடுத்துள்ளோம்.
தனியார் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்கிறது, காணி உரிமையாளர்களுக்கு எவ்விதமான குத்தகை வழங்கப்படாமல் சட்டவிரோதமாக இவை நடக்கிறது,என்பனபோன்ற விடயங்களையம் சுட்டிக்காட்டினோம்.
மக்களின் வரிப்பணத்தை ஊதியமாக பெறும் இராணுவம் பல ஆயிரம் ஏக்கர் தனியார் காணிகளில் விவசாயம் செய்கிறது. அதன் மூலம் கிடைக்கும் வருமானம் நாட்டின் தேசிய வருமானத்தில் கணக்கு வைக்கப்படுகிறதா?
ஏன்ற கேள்வியையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் எழுப்பியுள்ளோம்.
எமது கோரிக்கை வலி, வடக்கு மக்களின் தனியார் காணிகள் விடுவிக்கப்படுவதோடு விடுவிக்கப்பட்ட காணிகள் சட்டரீதியாக அந்த மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே.
அரசாங்கம் வலிவடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் சர்வதேச பொறிமுறையூடாக அழுத்தங்களை மேற்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தள்ளப்படுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.