தென்ஆபிரிக்காவில் (South Africa) கைவிடப்பட்ட சுரங்கமொன்றில், 87 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் ஆபிரிக்காவில் தங்க சுரங்கங்கள் அதிக அளவில் காணப்படும் நிலையில், தங்கம் வெட்டி எடுத்தபின் இந்த சுரங்கங்கள் கைவிடப்படும்.
இதில் ஜோகன்னஸ்பர்க்கின் தென்மேற்கு பகுதியில் உள்ள பஃப்பெல்போன்டீன் தங்க சுரங்கம் சுமார் 2.5 கிலோ மீட்டர் ஆழம் கொண்டது.
இந்த சுரங்கத்தில் சட்டவிரோதமாக சுரங்க தொழிலாளர்கள் தங்கம் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இரண்டாயிரம் தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இருந்து சுமார் இரண்டாயிரம் தொழிலாளர்கள் இந்த சுரங்கத்தில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் சுரங்கத்தில் தங்கியிருந்தவர்களை குற்றவாளி என அறிவித்த காவல்துறையினர் அங்கிருந்து வெளியேறிவர்களை கைது செய்து வந்தனர்.
இதனால் தொழிவாளர்கள் பலர் கைதுக்கு பயந்து உள்ளேயே இருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வெளியேறுவதற்காக சுரங்கத்திற்குள் உணவு பொருட்கள் அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் காவல்துறையினர் நேற்று (16) சுரங்கத்திற்குள் உள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
வெளிப்படையான விசாரணை
ஏற்கனவே ஒன்பது உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (16) இறந்து போன 78 பேர் உடல்களை சுரங்கத்தில் இருந்து மீட்டுள்ளனர்.
அந்நாட்டு காவல்துறையினர் தரப்பில் மீட்புப்பணி முழுமையாக முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் சுரங்கத்தில் தற்போது யாரும் இல்லை என நம்பப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, சுரங்கத் தொழிலாளர்கள் சார்பில், காவல்துறையினர் உணவு பொருட்கள் செல்வதை நிறுத்தியதால் உள்ளே இருந்தவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.