படுகொலைசெய்யப்பட்ட சிரேர் மாமனிதர் டி.சிவராம் அவர்களின் 19வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் ஞாயிற்றுக்கிழமை மாலை (28.04.2024)மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
தராகி என்றழைக்கப்படும் சிரேஷ்ட ஊடகவியலாளாலரான தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 19 ஆண்டுகள் கடந்துவிட்டது.
ஈரான் அதிபரால் திறந்து வைக்கப்பட்ட உமா ஓயா: பாரிய அனர்த்தம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
சிவராமின் பங்களிப்பு
ஊடகவியலாளர் தராகி சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 1959 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி பிறந்த இவர்1989ஆம் ஆண்டு ஊடகவியலாளர் றிச்சர்ட் டி சொய்சாவினால் ஊடகத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.
ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சிவராமின் முயற்சிகளால் குடிமக்கள் சார்ந்த முகத்தை வெளிப்படுத்தியது.
அத்துடன் பொங்குதமிழ் போன்ற எழுச்சி நிகழ்ச்சிகள், கடையடைப்பு போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதிலும் நேரடியாகச் சென்று பங்கெடுத்துக் கொள்வதிலும் அவை சார்ந்த செய்திகளை வெளியிடுவதிலும் சிவராமின் பங்களிப்பு அபரிமிதமானது.
தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் ‘கண்டு கொள்ளாமல்’ விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார்.
சிவராமின் படுகொலை
வெளிநாட்டு ஊடகத்துறையினருடன் மட்டுமன்றி, அரச பிரதிநிதிகள், அரசியல் அறிஞர்கள், மனித உரிமை அமைப்புக்கள் என்பவற்றுடன் நெருங்கிய உறவைப்பேணிவந்த சிவராமின் இழப்பு, தமிழ் மக்களிற்கும், தமிழ்த் தேசியத்திற்கும் மட்டுமன்றி அனைவருக்கும் பேரிழப்பைக் கொடுத்தது.
ஜனநாயக நாடு என்றழைக்கப்படும் இலங்கையில் இன்றும் நிலவும் ஊடக சுதந்திரத்திற்கான மறுப்பினையும் ஊடக அடக்கு முறையினையும் எடுத்துக்காட்டுவதாகவே தராகி சிவராமின் படுகொலையும் அமைந்துள்ளது என்பது கண்கூடு.
இந்நிலையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வேந்தல் நிகழ்வுகளை கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன இணைந்து இந்த ஏற்பாடுசெய்திருந்தன.
இதன்போது, 4.00 மணியளவில் நினைவுத்தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றதைத் தொடர்ந்து தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், இலங்கை இணைய ஊடக அமைப்பின் ஏற்பாட்டானர் பெடிகமகே, மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கலந்து கொண்டிருந்தனர்.
இணையத்தளம் ஊடாக முறைப்பாடுகள்: காவல்துறையினரின் முக்கிய அறிவித்தல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |