மட்டக்களப்பு (Batticaloa) மட்டிக்கழி பகுதியில் காணி விவகாரமொன்றில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மதரீதியாக அவதூறு வார்த்தை பிரயோகம் செய்ததால் அப்பகுதி மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
மட்டக்களப்பு மட்டிக்கழி பகுதியில் ஆண்டு தோறும் நடைபெறும் துரோபதை அம்மன் ஆலயத்தின் மஞ்சள் குளிக்கும் இடமாக அமைந்துள்ள காணி ஒன்றில் மீன்வாடி அமைப்பதற்கு நபர் ஒருவருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த காணி மட்டிக்கழி மக்களால் காலாகாலமாக பாதுகாத்து வந்த நிலையில், அதனை தனியார் ஒருவருக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியதை அடுத்து கிராம மக்களுக்கும் தனிப்பட்ட நபருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டுள்ளது.
பாரிய போராட்டங்கள்
இது தொடர்பாக கிராம மக்கள் சம்பந்தப்பட்ட பல அதிகாரிகளுடன் கலந்துரையாடி பல முனைப்புகளை மேற்கொண்ட போதிலும் பலனளிக்காததால் மாவட்ட அரசாங்க அதிபர் என்ற ரீதியில் தங்களது சைவ விழுமியங்கள் தொடர்பான விடயங்களை அவருக்கு தெளிவுப்படுத்தியுள்ளனர்.
இதன்போது, கிராம மக்களுக்கு ஆதரவாக பேசிய அரசாங்க அதிபர், திடீரென அவர்களுக்கு எதிராக பேசியதோடு அவர்களுடைய மதம் சார்ந்த அடையாளங்கள் மீது அவதூறு வார்த்தை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காலாகாலமாக ஆலய விழுமியங்களுக்காக பாவிக்கப்பட்ட இந்தக் காணியினை மீண்டும் தங்களது ஆலய விழுமியங்களுக்காக வழங்க வேண்டும் என்றும் இது தொடர்பாக சரியான தீர்மானங்கள் கிடைக்காத பட்சத்தில் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பிரச்சினை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர்களுக்கு அறிவித்திருந்த போதிலும் அவர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பாக மிக விரைவில் தங்களுக்கான தீர்வினை பெற்றுத் தருவதாக உறுதியளித்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபர் மதரீதியாக ஒரு பாரிய பிரச்சனையை தூண்டுவதற்கு முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.