வவுனியா (Vavuniya) பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று (14.06.2024) பம்பைமடுவில்
உள்ள பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை
அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும்
நிலையில், குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த கவயீர்ப்புப் போராட்டத்தினை அடுத்து, கல்வி சாரா ஊழியர்கள் தங்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்றினை ஏற்பாடு
செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்தி – திலீபன்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்
மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தில்
ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று கவனயீர்ப்பு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இன்று
10.45 மணியளவில் குறித்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
சம்பள முரண்பாடு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்து வழங்குதல் போன்ற பல நீண்டகால
பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செய்தி – கஜிந்தன்
கிழக்கு பல்கலைக்கழகம்
அதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது, இன்று (14.06.2024) கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாகம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழக போதனைசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் தொடர் பணிப் பகிஷ்கரிப்பு
காரணமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும் என
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து மூல தீர்வு
இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க
தலைவர் ஏ.ஜெகராஜு கருத்து தெரிவிக்கையில்,
சம்பள மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு கோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழக
நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசார் உதவி உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசார
ஊழியர்கள் இணைந்து மே மாதம் 2ஆம் திகதி தொடக்கம் இன்றுடன் 44 நாட்களாக
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
எமது கோரிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர்
ஆகியோருடன் பேசி உடன்பாட்டுக்கு வந்து அதற்கான எழுத்து மூல தீர்வு கிடைக்கும்
என எதிர்பார்த்திருந்தோம்.
ஆனால், அரசாங்கமும் இதற்குப் பொறுப்பான அரச
நிறுவனங்களும் எமக்கான தீர்வை வழங்காது இழுத்தடிப்புச் செய்து வருவதையே
அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் பொறுப்பு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையே சாரும்.
பட்டமளிப்பு நிகழ்வு
ஆதலால், இந்த இடத்தில் தலையீடு
செய்து ஊழியர்களின் கோரிக்கைளுக்கு செவிசாய்த்து பல்கலைக்கழக அனைத்து
ஊழியர்களினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரியாக ஆணைக்குழு தலைவர் செயற்பட வேண்டும்
என வலியுறுத்த விரும்புகிறோம்.
போதனைசாரா ஊழியர்களை புறந்தள்ளி பல்கலைக்கழக செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் என
சிலர் சிந்திக்கின்றனர்.
ஆனால், எமது பணிபகிஷ்கரிப்பு காரணமாக பட்டமளிப்பு
நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதை அவர்கள் சிந்திக்க தவறியுள்ளனர்.
கல்விசாரா
உத்தியோகத்தர்களின் பலம் குறித்து அவர்கள் நன்கு உணரும் வகையில் சில
நடவடிக்கைகளை இன்று தொடக்கம் ஆரம்பித்துள்ளோம்.
அந்த வகையில் பகிஷ்கரிப்பையும் பொருட்படுத்தாதது மனிதாபிமான அடிப்படையில்
நாங்கள் வழங்கிவந்த சேவைகள் சிலவற்றை இன்றுமுதல் நிறுத்தியுள்ளோம்.
எமது
பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்படாவில் மனிதாபிமான அடிப்படையில்
தொடர்ந்தும் வழங்கப்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் முடக்கி சிலருக்கு
பாடம் புகட்டவும் தயங்க மாட்டோம் என தெரிவித்தார்.
செய்தி – குமார்