Courtesy: Sivaa Mayuri
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC),இலங்கை தொடர்பான முக்கிய குழு, தமது அறிக்கையை முன்வைத்துள்ளது.
அதில், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள் சுயாதீனமானவை, பக்கச்சார்பற்றவை, வெளிப்படைத்தன்மை கொண்டவையாக இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சமூகங்களின் எதிர்பார்ப்புகளை, அவை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துமாறும், இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ஜெனீவாவில் உள்ள UNHRC இல் இலங்கை முக்கிய குழுவின் அறிக்கையை இன்று, கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா சார்பாக ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகள் தூதுவர் ரீட்டா பிரெஞ்ச் முன்வைத்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள்
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், இலங்கையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில், அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு நன்றி தெரிவித்த, இலங்கை தொடர்பான முக்கிய குழு, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீண்டகாலமாக தண்டனையிலிருந்து இலங்கை விடுபடுவதை, அந்த அறிக்கை எடுத்துக்காட்டுவதாகக் கூறியுள்ளது.
பலவந்தமாக காணாமல் போதல்களால் ஏற்படும் துன்பங்கள், அனைத்து சமூகங்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கு, இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்படவேண்டும்.
பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் உட்பட இலங்கையினால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எந்தவொரு புதிய சட்டமும், மனித உரிமைக் கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பவற்றுக்கு முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்றும் முக்கிய குழு கோரியுள்ளது.
அத்துடன், நீதித்துறை சுதந்திரம் மற்றும் நாட்டின் சட்ட நிறுவனங்களின் சுதந்திரம் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை நாங்கள் வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகள் விடுவிக்கப்பட்டதை வரவேற்கும் அதேவேளை, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் காணி அபகரிப்பு தொடர்பிலான பதற்றங்கள் மற்றும் தன்னிச்சையான கைதுகள், ஒழுங்கற்ற தேடுதல்கள், கவலையளிப்பதாக குழு தெரிவித்துள்ளது.