‘டித்வா’ பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இழப்பீட்டை கணக்கிடுவது குறித்து ஜனாதிபதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இழப்பீட்டைக் கணக்கிடும் முறைமை
தொடர்ந்துரையாற்றிய அவர்,
ஜனாதிபதி கொடுக்கப்படும் இழப்பீடு தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஆனால் இழப்பீட்டைக் கணக்கிடும் முறையை அதிகாரிகளிடம் குறிப்பிடாமல் குறித்த தரப்பினரை குற்றம் சாட்டுவது பயனற்றது.
இந்த நேரத்தில், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அளவுகோல்கள் குறித்து ஜனாதிபதியும், துறைக்குப் பொறுப்பான அமைச்சரும் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும்.

அதன்படி அதிகாரிகள் செயல்படுவார்கள். அந்த முறையிலிருந்து விலகிச் சென்றதாக குற்றம் சாட்டுவது பயனற்றது. அரசாங்கத்தில் உள்ளவர்கள் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.
அரச ஊழியர்கள், கிராம சேவகர்கள், அரச பொறிமுறையை குறை கூறி நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, நிவாரணங்கள் மக்களுக்குக் கிடைக்க சிறந்த முறைமையை கையாளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

