Courtesy: Sivaa Mayuri
மன்னார் (Mannar) மற்றும் பூநகரியில் அமைக்கப்படவுள்ள 484 மெகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தி மையங்களுக்கான அனுமதியை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்திற்கு வழங்குவதற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துள்ளது.
இந்த திட்டங்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள், திட்டத்தின் குறைந்த செலவு மற்றும் தொழில்நுட்ப இணக்கத்தன்மையை மதிப்பிடுவதற்கு போதுமானதாக இல்லை என்பதை ஆணைக்குழு, தமது அனுமதி மறுப்புக்கான காரணமாக தெரிவித்துள்ளது.
அமைச்சரவையின் ஒப்புதல்
இதன்படி இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் அதானி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான முழு வரைவு மின்சார கொள்முதல் ஒப்பந்தம் போன்ற அடிப்படைத் தகவல்கள் கூட ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது
அத்துடன் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின் முடிவுகள் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் வழங்கிய சுற்றுச்சூழல் உரிமத்தின் விவரங்கள் கூட சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தநிலையில் அனுமதி மறுப்பை அடுத்து குறித்த ஆவணங்களை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க, இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சட்டமா அதிபர் திணைக்களமும் அனுமதி வழங்கியது.